வடகிழக்கு இணைப்பு சாத்தியமே! Basheer Segu Davood


தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்பது வடகிழக்கு இணைந்த மாகாணம் மாத்திரம்தான் என்ற நிலைக்கு கீழிறங்கி உள்ளது என்பது என் அவதானமாகும்.
அரசுக்கு (ஐக்கிய தேசியக் கட்சிக்கு)
வடகிழக்கை இணைத்து
வழங்குவதில் சில சிக்கல்கள் உள்ளன.

கூட்டு எதிரணி, சிங்கள மக்களின் உணர்வுகளை உலுக்கிவிட்டு அரசியல் இலாபமடையவும், இணக்க அரசை அசைத்து ஆட்டங்காணச் செய்யவும் முயற்சிக்கும்.
பௌத்த சிங்கள தீவிரவாதம் கடுமையான எதிர் நிலைப்பாடுகளை மேற்கொண்டால் நாட்டில் அமைதிக் குலைவு ஏற்படும்.
முஸ்லிம் மக்கள் தங்களுக்கு தீர்வு ஒன்று இல்லாமல் இணைவுக்கு சம்மதம் தெரிவிக்கமாட்டார்கள்.
அரசில் கூட்டாளியாக இருக்கும்
ஜாதிக ஹெல உறுமய ஆதரவளிக்கமாட்டாது.
அரசாங்கத்தின் பெரிய பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜனாதிபதி தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 40 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கிளை தடுமாறும், இவர்கள் இணைப்புக்குஆதரவாக நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெம்பான்மையை வழங்கினால், ஜனாதிபதி அவரது கட்சியை முழுமையாக கைப்பற்றும் வேலைத் திட்டத்தை கைவிட நேரும்.இது அவர்களுக்கு பெரும் அரசியல் கைசேதத்தை விளைவிக்கும்.
இவை போன்ற சிக்கல்களே அவை.
இந்த ஐந்து முக்கிய தரப்புகளில் இருந்து கிளம்பும் எதிர்ப்புகளை
சமாளிக்கும் உத்திகளை ஐ.தே.கட்சி வெளி நாட்டு உபாய வகுப்பாளர்களின் உதவியுடன் பெற்றிருக்கலாம். இந்திய இலங்கை ஒப்பந்தத்தினூடாக வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்ட போது இந்தியாவின் உபாய வகுப்பாளர்களே உதவினார்கள் என்பது இரகசியமல்ல, எனவே இவ்விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேர்ந்த அனுபவமும் அறிவும் உண்டு.இக்கட்சியே வடகிழக்கை இணத்த கட்சியாகும்.
இவ்விணைப்பை 21வருடங்கள் எவராலும் அசைக்க முடியவில்லை. அன்றைய காலத்தில் ஐ.தே.கட்சியின் உறுதியான முடிவினால் பேரின சக்திகள் இணைப்பை தடுக்க வக்கற்றிருந்தனர், ஆயினும் வீதிகள் எங்கும் டயர்களை எரித்தும், பல பஸ்களை எரித்தும், அரச உடமைகளை சேதம் செய்தும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து மாபெரும் ஆர்ப்பாட்டங்களை செய்திருந்தனர்.இவ்வார்ப்பாட்டங்கள் அன்றைய அரசினால் ஈவிரக்கமின்றி அடக்கி ஒடுக்கப்பட்டன.
காலம் கனியும் வரை காத்திருந்த
சிங்கள பெருந்தேசியவாத சக்திகள் நீதி மன்றத்தின் மூலம் மீண்டும் வடக்கையும் கிழக்கையும் பிரித்தனர். இதற்கு அன்றைய அரசின் ஊமைச் சம்மதமும் இருந்தது.
தற்போது ஐ.தே.கட்சி, இணைப்புக்கு எதிர்கொள்ளும் சவால்களை எவ்வாறு முறியடிக்க முயற்சிக்கும் என நோக்குவோம்.
எதிர்கொள்ளப்படும் சவால்களை சிங்களத் தரப்பிலிருந்து வருவன என்றும், முஸ்லிம் தரப்பிலிருந்து வருவன எனவும் இரட்டையாக சுருக்கிப் பார்க்கலாம்.
சிங்களத் தரப்பை சமாளிக்க இது வடகிழக்கு இணைப்பல்ல வடக்கையும் கிழக்கையும் மீள் எல்லை நிர்ணயம் செய்து இரண்டு மாகாணங்களாக பிரிப்பதுதான் என்று கூறி அம்பாறையில் உள்ள சிங்கள பெரும்பான்மை நிர்வாகப் பிரிவுகளை வெட்டி எடுத்தும் மொனராகலை மாவட்டத்திலும், பதுளை மாவட்டத்திலும் இருந்து ஓரிரு கிராமங்களை வெட்டி எடுத்தும் இவற்றை இணைத்து சிங்களவர்களுக்கு என்று கிழக்கில் ஒரு தனி மாகாணத்தை உருவாக்கி சிங்கள தரப்பின் எதிர்ப்பை மடக்கலாம். மேலதிகமாகத் தேவைப்பட்டால், திருகோணமலையில் உள்ள சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சேருவிலைத் தொகுதியை பொலன்னறுவை மாவட்டத்துடன் இணைத்தும் விடலாம்.
இப்படி நடந்தால் தமிழ்பேசும் ஒரு மாகாணமும், சிங்கள மாகாணம் ஒன்றுமாக இரண்டு மாகாணங்களே இருக்கும். ஆயின் சிங்களவர்களுக்கு என்ன பிரச்சினை?
தமிழர் தலைமைகளும் எதார்த்தத்தின் அடிப்படையில் இணைந்த வடகிழக்கு எனக் கருதுவது தமிழ் பேசும் நிலம் என்பதுதானே!
(((கிழக்கில் நிகழ்ந்த சிங்களக் குடியேற்றங்களின் ஆபத்து பற்றி 70 களில் அம்பாறை தமிழ், முஸ்லிம் மக்களின் மத்தியில் பிரச்சாரம் செய்ததனால்தான் தியாகி சிவகுமாரன் தலை மறைவு வாழ்க்கையை மேற்கொண்டார். மட்டுமல்லாது இலங்கை பாதுகாப்பு தரப்பினரால் படுகொலையும் செய்யப்பட்டார். தமிழ்பேசும் மக்களின் விடுதலைக்காக கொடுக்கப்பட்ட முதல் உயிர்க் கொடை இவருடையதுதான். இவர் போல் சிந்தித்த பலர் இன்று உயிரோடு இருந்திருந்தால் வரலாற்றில் தமிழ் முஸ்லிம் பிரிவினையே நிகழ்ந்திராது. இவரும் இவர் போல அக்காலத்தில் செயற்பட்டு உயிர் நீத்த பலரும் நிகழ்கால தமிழ் பேசும் தலைவர்களையும், பரம்பரையையும் மன்னிக்க வேண்டும்.)))
புதிய அரசியலமைப்பில் நாட்டின் அந்தஸ்து ஒற்றையாட்சி என்ற பதமா அல்லது சமஷ்டி என்ற வடிவமா என்கிற நெருக்கடிக்கு, அரசும், அதில் அங்கம் வகிக்கும் இரு பெரும் கட்சிகளும், அரசியல் சாசன விற்பன்னர்களும் அப்படியொரு பதத்தினை யாப்பில் சேர்க்கத் தேவையில்லை என்று தந்திரமாக உடன்பட்டுள்ளனர்.இதனை நாட்டு மக்களுக்கு நாசூக்காக விளக்கியும் வருகின்றனர். தமிழ்தேசியக் கூட்டமைப்பும் இவ்விடயத்தில் விட்டுக் கொடுப்புக்கு தயாராக இருப்பது போலவே தென்படுகிறது.இதே உத்தியை பாவித்து, வடக்கு கிழக்கு இணைப்பு என்று எவரும் கருதத்தேவையில்லை இது எல்லை நிர்ணயம் மட்டும்தான், வடகிழக்கு மாகாணம் என்ற பெயரைப் பாவிக்கத் தேவையில்லை என்று சொல்லி சிங்களவர்களை திருப்திப்படுத்த முடியும்.
முஸ்லிம் தரப்பை சமாளிக்க, இது நிரந்தர இணைப்பல்ல; தற்காலிகமான-நிபந்தனையுடன் கூடிய இணைப்பாகும் எனக் கூறுவார்கள்.சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்கும் எனவும் உத்தரவாதம் தரப்படும்.
முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் செய்யமாட்டார்கள், செய்தாலும் இலகுவாக அடக்கலாம், இலங்கை முஸ்லிம்கள் உத்தரவாதங்களை உறுதியாக நம்பி தொடர்ந்தும் ஏமாறத் தயாரான அரசியல் பிராணிகள், முஸ்லிம் தலைவர்கள் ரொக்கங்களின் நாயகர்கள் ஆகையால் வாங்கிவிடலாம், செயற்கையாக மார்க்கம் சார்ந்த நெருக்கடியை ஏற்படுத்தினால் அரசியல் விவகாரங்களில் இருந்து முஸ்லிம் சமூகத்தை திசைமாறச் செய்யலாம்; இந்த இடைவெளியில் உரிமையின் களுத்தை அறுத்தாலும் அந்த சமூகம் உணர்ந்து கொள்ளாது. கண்ணை மூடிக் கொண்டு தற்காலிக இணைப்பை பத்து வருடம் ஓட்டினால் முஸ்லிம்களின் அடுத்த பரம்பரை அஷ்ரஃபை மறந்ததைப் போல இதையும் மறத்துவிடும்.எனவே தற்காலிகம் நிரந்தரமாகிவிடும்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு முஸ்லிம் சமூகத்தின் மீது மயக்க மருந்தை விசுறத் தெரியும், இதில் இக்கட்சிக்கு எழுபது வருட அனுபவம் உள்ளது. அக்காலத்தில் பச்சை நிறத்தை வைத்து ஏமாற்றினர்.
அது இஸ்லாத்தின் நிறமல்லவா, பள்ளிவாயில்களில் ஏற்றப்படும் கொடிகளும், அவுலியாக்களின் அங்கிகளும் பச்சையல்லவா,. ஐ.தே.கட்சி முஸ்லிம்களின் நிறத்தைக் கொண்ட கட்சி, எனவே அதற்கே நமது ஆதரவு என அரை நூற்றாண்டுகளாக செயற்பட்ட சமூகத்தின் மூன்றில் ஒரு பங்கை அஷ்ரஃப் விழிப்புணர்வூட்டி அரசியலில் வெற்றி பெற வைத்தார்.
அவர் தனது கட்சியின் கொடியில் பச்சையில் மஞ்சளைக் கலந்தும், பச்சை நிற மரத்தை சின்னமாகக் கொண்டும் முஸ்லிம்கள் அன்று சென்று கொண்டிருந்த பாதையிலேயே புகுந்து அடையாளத்தை நிறுவி முஸ்லிம்களை கவர்ந்திழுத்தார்.
தனித்துவ அரசியலில் நீலமும், பச்சையும் நமக்கு ஒரு பொருட்டல்ல, நமது அரசியல் இலக்கு ஆகக்குறைந்தது இனப்பிரச்சினைத் தீர்வில் நமக்கென்று ஒரு பங்குதான் என்பதை அஷ்ரஃப் தெளிவாகக் குறிப்பிட்டுச் சென்றுள்ளார்.இக்கருத்தையே நாம் பின்பற்றவேண்டும்.
நல்லாட்சி அரசின் தமிழர்களுக்கான ஆகக்குறைந்த நியாயம் வழங்கும் நிகழ்ச்சி நிரலில் கிழக்கு சிங்களவர்களுக்கும் திருப்தி தரும் தீர்வு உள்ளது.கிழக்கு முஸ்லிம்களுக்கு என்று உத்தரவாதம் மட்டுமே உண்டு. முஸ்லிம்கள் ஏமாந்தால் வடகிழக்கு இணைப்பு சாத்தியந்தான்.
ஐக்கிய தேசியக் கட்சியினால் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட பூச்சாண்டித் தீர்வுகளான மாவட்டசபை, மாகாணசபை போன்றவற்றை ஏற்றுக் கொள்வது போல் நடித்து அவற்றை படிக்கட்டுகளாக பாவித்து அடுத்த கட்டத்துக்கு காய் நகர்த்தியதைப் போல் , சிங்களவர் வாழும் இடங்களை தவிர்த்து இணையும் வடகிழக்கை ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு காய் நகர்த்த தமிழ்த்தேசிய ஜனநாயக சக்திகளால் முடியும்.
முஸ்லிம்களால் என்ன செய்ய முடியும்?
-திட்டமிடத் தவறினால் நீ
தவறுவிடத் திட்டமிடுகிறாய்-

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்