ஜெனீவா உலக வர்த்தக அமைய மாநாட்டில் அமைச்சர் றிசாத்
சவால்களுக்கும் அழுத்தங்களுக்கும் மத்தியிலே இலங்கை:
நவீன பொருளாதார மறுசீரமைப்பை நோக்கி முன்னேறுகின்றது!
ஜெனீவா உலக வர்த்தக அமைய மாநாட்டில் அமைச்சர் றிசாத்...
சுஐப் எம்.காசிம்     

இலங்கை பல்வேறு சவால்களுக்கு மத்தியிலே நவீன பொருளாதார மறுசீரமைப்பை இலக்காகக் கொண்டு தனது வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், 2030 ஆம் ஆண்டில் உரிய அடைவு மட்டத்தை அடைவதே எமது குறிக்கோளாகும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.  
சுவிட்சர்லாந்து, ஜெனீவா நகரில் இடம்பெற்ற உலக வர்த்தக அமைய(World Trade Organization) மாநாட்டில் இலங்கை சார்பில் பங்கேற்ற கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் இலங்கை தூதுக்குழுவுக்குத் தலைமையேற்று உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டதாவது,
உலக வர்த்தக அமையத்தின் கொள்கை மீளாய்வுக்குழு தனது விசாலமான அறிக்கையில் இலங்கையைப் பற்றியும் குறிப்பிட்டமைக்கு எனது நாட்டின் சார்பில் முதற்கண் எனது நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். அத்துடன் இந்த அமர்வுக்குத் தலைமை தாங்கும் மெடம் ஐரின் பி கே யங் அவர்களும் தனது அறிமுக உரையில் எமது நாட்டின் விடயங்களைப் பற்றி வெளிப்படுத்தியமையை சிறப்பானதாகக் கருதுகின்றேன்.
எழுத்து மூலமான வினாக்களை எங்களிடம் சமர்ப்பித்த அங்கத்தவர்களுக்கு நான் தலைமை தாங்கும் எமது தூதுக்குழு நன்றிகளை வெளிப்படுத்துகின்றது,


பன்னிரண்டு அங்கத்துவ நாடுகளிலிலிருந்து 138 வினாக்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த வினாக்களின் பெரும்பாலான அம்சங்களுக்கு நாம் ஏற்கனவே எழுத்து மூலம் பதில்களைச் சமர்ப்பித்துள்ள போதும் எஞ்சியவை தொடர்பிலும் விரைவில் உரிய பதிலை வழங்குவோம்.
இலங்கையின் நான்காவது வர்த்தகக் கொள்கை மீளாய்வானது பிரதான இரண்டு காரணங்களினால் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததென நான் கருதுகின்றேன்.
முதலாவதாக இந்த மீளாய்வானது தேசிய நல்லிணக்க அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் ஒன்றாக அமைகின்றது. எமது நாட்டின் பிரதானமான இரண்டு அரசியல் கட்சிகளினது பங்களிப்பின் மூலம் கடந்த வருடம் ஜனவரி மாதம் “தேசிய நல்லிணக்க அரசாங்கம்” அமைக்கப்பட்டது.
இவ்விரண்டு பிரதான கட்சிகளினதும் அரசியல் கோட்பாடுகளும், சித்தாந்தங்களும் வேறுபட்டு இருந்தபோதிலும்  ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியை உருவாக்குவதற்கான தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலின் கீழ், அவ்விரண்டு கட்சிகளும் இணைந்து பணியாற்ற இணங்கின. எமது நாட்டின் நீண்டகால சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணும் வகையில் முதலில் பிரதான பிரச்சினைகளை அடையாளங்கண்டு, பொதுவான தளத்தில் நின்று அவற்றுக்குத் தீர்வு காண்பதற்காகவே தேசிய அரசாங்கம் நிறுவப்பட்டது.
2015 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி உச்சி மாநாட்டின் பிரகடனத்தின் வழியே உலகளாவிய நிலைபேறான அபிவிருத்தியை இலக்காகக்கொண்டு, அதற்கு இயைந்தவாறான பொருளாதார நவீன மறுசீரமைப்பை தேசிய அரசாங்கம் அறிமுகப்படுத்தும் செயற்பாடுகளில் இறங்கியுள்ளது.
இரண்டாவதாக முப்பது வருடகால தொடர்ச்சியான பயங்கரவாதச் செயற்பாடுகள் 2௦௦9 ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து, நாட்டின் அபிவிருத்தியை முன்னிலைப்படுத்தி அதனை மையமாகக்கொண்ட மறுசீரமைப்பாகவே இது அமைகின்றது. பயங்கரவாதப் பிரச்சினையால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக்கு 1/3 பங்கு மக்கள் பங்களிப்பு மேற்கொள்ள முடியாது பாதிக்கப்பட்டிருந்தனர்.
பயங்கரவாதம் துடைத்தெறியப்பட்ட பின்னர், 2௦௦9 ஜூன் மாதத்திலிருந்து வடக்கு, கிழக்கில் புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களின் நிலைபேறான வாழ்க்கை வசதிகள் தொடர்பில் பாரிய சவால்களுக்கு நாங்கள் முகங்கொடுக்கவேண்டி நேரிட்டது.
கொடூர பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவனே. வடமாகாணத்தில் அமைதியாக வாழ்ந்த முஸ்லிம்களாகிய எங்களை 24  மணிநேர காலக்கெடுவில் அந்த மாகாணத்திலிருந்து பயங்கரவாதிகள் வெளியேற்றினர்.
சொத்துக்கள், நிலபுலங்கள் மற்றும் தேடிய செல்வங்களை எல்லாம் தாரைவார்த்து விட்டு வெறுமனே சில உடுதுணிகளை மாத்திரம் எடுத்துக்கொண்டு சொப்பிங் பேக்குடனேயே வெளியேறினோம். எங்கள் குடும்பமும் அகதி முகாமிலேதான் காலம் கடத்தியது. அந்த முகாமிலிருந்தே நானும் பாராளுமன்றத்துக்குத் தெரிவானேன்.
எங்கள் நாட்டில் புனர்வாழ்வு மற்றும் புனர்நிர்மாண செயற்பாடுகளுக்குத் தேவையான செலவு மிகவும் அதிகரித்து இருப்பதால் அரசாங்கம் சர்வதேச மூலங்களிலேயே சார்ந்து நிற்கவேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.
இந்தச் செயற்பாடுகளுக்காகப் பொதுவாக இலங்கைக்குக் கைகொடுப்பவர்களுக்கு நாங்கள் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றோம். அதேவேளை, அரசாங்கம் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு நாட்டின் வர்த்தகச் சூழலை உருவாக்கி வருகின்றது. வர்த்தகக் கொள்கை மீளாய்வு மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தக் காலகட்டத்தில் எமது நாட்டைப் பற்றி நான் சுருக்கமாக அறியத் தருகின்றேன்.
இலங்கை 65,610 km விஸ்தீரணமும், 21 மில்லியன் சனத்தொகையையும் கொண்ட ஒரு தீவாகும். இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2015 ஆம் ஆண்டு 82.2 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது. 2010 ஆம் ஆண்டளவில் 2744 அமெரிக்க டொலராக இருந்த தலா வருமானம்,2015 ஆம் ஆண்டு 3924 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
உலகளாவிய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தகதியின் தாக்கத்தின் காரணமாக ஏற்பட்ட வெளிச்சக்திகளின் அழுத்தங்கள் மற்றும் உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடிகளுக்கும், சவால்களுக்கும் மத்தியிலும் இலங்கை,2010 – 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தனது பொருளாதார வளர்ச்சியைச் சரியாகப் பேணி வருகின்றது.
60% சேவைகள் மற்றும் பணிகள் சார்ந்த துறையும், 31% கைத்தொழில் துறையும், 09% விவசாயத் துறையும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றி வருகின்றன.
கொள்கை ரீதியான நடைமுறை ஊக்குவிப்புக்கு நுண்பொருளாதாரத் திட்டங்கள் பெரிதும் உதவி வருகின்றன. இதன் மூலம் பொருளாதார வளர்ச்சிப் பெறுபேறுகளில் நேரிய தாக்கம் ஒன்றை செலுத்தி வருகின்றது.
“மிலேனியம் அபிவிருத்தி இலக்கினை” அடைவதற்கான பல்வேறு செயற்பாடுகளில் இலங்கையானது தன்னை ஈடுபடுத்தி வருகின்றது. குறிப்பாக தீவிரமான வறுமையை ஒழித்தல், ஆரம்பக் கல்வியை 1௦௦% புகட்டுதல், பால்நிலை சமத்துவத்தைப் பேணல், சிறுகுழந்தைகளின் இறப்பு வீதத்தை 2/3 குறைத்து, பிள்ளைகளின் இறப்பு வீதத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தல், 1௦௦௦௦௦ க்கு 33 ஆக குழந்தைகளின் இறப்பு வீதத்தைக் குறைக்கும் வகையிலே, தாயின் சேமநலத்தைப் பாதுகாத்தல், சமூக நோய்களிலிருந்து மக்களைப் பாதுகாத்தல் ஆகியவை தொடர்பிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இதற்கு மேலதிகமாக அறிவு சார்ந்த துறைகளுக்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி எழுத்தறிவு வீதத்தை 93% என்ற இலக்கை நோக்கி உயர்த்தல் ஆகியவை தொடர்பிலும் கவனஞ்செலுத்துகின்றோம். அத்துடன் இலங்கை பல்வேறு சமூக, வர்த்தக அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் பிராந்தியத்தில் முன்னணி வகிக்கின்றது.
உலக பொருளாதார அமையத்தின் பூகோள ரீதியான போட்டித் தன்மையின் சுட்டெண்ணில் இலங்கை 144 நாடுகளில் 73 ஆவது ஸ்தானத்தை வகிக்கின்றது. உலக வங்கியின் வர்த்தகச் சுட்டெண்ணில் இலங்கை 190 நாடுகளில்  110ஆவது இடத்தை வகிக்கின்றது.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்தில் இலங்கை தன்னை ஈடுபடுத்தியுள்ளதோடு, சர்வதேச வர்த்தகத்திலும் பெரும் பங்காற்றுகின்றது. திறந்த பொருளாதாரக் கொள்கையை இலங்கை 1977ஆம் ஆண்டுஅறிமுகப்படுத்தியது.
காலத்துக்குக் காலம் அரசாங்கம் மாறிய போதும் வர்த்தகத் தாராளமயமாக்கல், கொள்கைத் திட்டங்கள் தொடர்ச்சியாகவே பேணப்பட்டு வருகின்றன.
தீர்வு மற்றும் வர்த்தகம் மீதான பொது ஒப்பந்தம் மற்றும் உலக வர்த்தக அமையம் ஆகியவற்றின் ஸ்தாபக அங்கத்துவ நாடாக இலங்கை விளங்குகின்றது. சிறிய மற்றும் நடுத்தரப் பொருளாதார விடயங்களில் ஆர்வங்காட்டுவதோடு பலபக்க வர்த்தக முறைமையைப் பேணி சர்வதேச வர்த்தகத்தில் ஆர்வங்காட்டி வருகின்றது.  
தேசிய நல்லிணக்க அரசாங்கமானது கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து அர்ப்பணிப்பான வர்த்தக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. வர்த்தகத்தில் வெளிப்படையைப் பேணுதல், முதலீட்டுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தல், வெளிநாட்டு முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில் குறித்த இலக்கை நோக்கிய பயணத்தில் நாம் முன்னேற முயற்சிக்கின்றோம்.
2030 ஆம் ஆண்டு ஏற்றுமதிப்பொருளாதார மூலோபாயத்தை முன்னோக்கிக் கொண்டு சென்று 2030  ஆம் ஆண்டளவில் உரிய இலக்கை நாம் அடைவோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்