ரமழானில் நாம் பெற்ற பயிற்சிகளை தொடர்வதன் மூலமே அதன் வெற்றி தங்கியுள்ளது என்று கொழும்பு மாநகர மேயர் முஸம்மில் தனது பெருநாள் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது,
புனித ரமழான் கண்ணியமிகுந்த மாதம். இறை விசுவாசிகளான நாம் இந்த புனித மாதத்திலே பசித்திருந்து விழித்திருந்து பகல் இரவுத் தொழுகைகளை நிறைவேற்றினோம். புனித குர்ஆனை ஓதி விளக்கம் பெற்றோம். இல்லாருக்கு உவந்தளித்து ஏழைகளை வாழ வைத்தோம். அன்பர்கள் அயலவர்கள் மீது பண்பும் பரிவும் காட்டி அவர்களுக்கு உதவி நல்கினோம்.
இந்த அரிய வாழ்க்கைப்பயிற்சி ரமழானுடன் நிறுத்தப்படாது வாழ்வு முழுவதும் தொடர வேண்டும். ரமழான் நிறைவு பெற்ற இன்றைய ஈகைத் திருநாளிலே ஈதுல் பித்ர் தொழுவோம். பித்ராவும் மனமுவந்தளிப்போம். இன்று தொடக்கம் இஸ்லாமிய நெறிகளை பேணி வாழ திடசங்கற்பம் பூணுவோம். பெருநாள் கொண்டாட்டத்தின் போது பிறருக்குத் துன்பம் ஏற்படாதவாறு நம்மை நாமே பேணிக் கொள்வோம்.
இன்று முஸ்லிம்களை இனவாதிகள் சீண்டிக் கொண்டே இருக்கின்றனர். சகோதர இனங்களுடன் மோத வைத்து வேடிக்கை பார்க்க நினைக்கின்றனர். இவர்களின் முயற்சிகளுக்கு நாம் இடமளிக்கக் கூடாது. உணர்ச்சிவசப்படாது பொறுமை காப்போம். விட்டுக்கொடுப்புடன் செயற்படுவோம். இனவாதிகளின் அடாவடித்தனங்களை அடக்க உதவி புரியமாறு இறைவனிடம் பிரார்த்திப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Post a Comment