எல்லை நிர்ணயம் சம்பந்தமாக அதிக முறைப்பாடுகள் இன்னமும் கிடப்பில் உள்ளதால் அவற்றுக்கான தீர்வு கிடைத்தவுடன் உள்ளுராட்சி தேர்தல் நடை பெறும் என உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடக மாநாட்டிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
உள்ளுராட்சி தேர்தலை நடாத்துவதற்கு அரசாங்கம் பயப்படவில்லை. இந்த தேர்தலை நாம் வேண்டுமென்றே பிற்போடுவதாகவும் ஐ தே கவை பலப்படுத்த முனைவதாகவும் அமைச்சர் திலான் பெரேரா குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் அவர் சொல்வது பிழையான குற்றச்சாட்டாகும். என்னைப்பொறுத்தவரை கட்சிகளை விட நாட்டின் நலனையே கருத்திற்கொள்கிறேன். நான் எந்தக் கட்சியை சேர்ந்திருந்தாலும் அமைச்சுக்கதிரையில் இருந்தால் நாட்டின் நலன் பற்றி மட்டுமே சிந்திப்பேன் என தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
உள்ளுராட்சி சபைகளின் கால எல்லை இம்மாதத்துடன் நிறைவுபெறுகிறது. அவற்றின் கால எல்லையை தொடர்ந்து நீட்டுவதா இல்லையா என்பதை கௌரவ ஜனாதிபதி மற்றும் பிரதமரின் முடிவுக்கேற்பவே நான் செயற்படுவேன்.
இவ்வேளை வட மாகாணத்தில் அகதிகளாக உள்ள மக்கள் எந்த வட்டாரத்துக்குள்ளும் இல்லாத நிலையில் அவர்கள் சம்பந்தமாக மாவட்ட செயலாளருடன் ஆலோசித்து அவர்களுக்கான தேர்தல் முறை பற்றி நாம் நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்தார்.
Post a Comment