ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணங்களை இணைக்கக்கூடாது என்றும்  மாகாணங்களுக்கு  குறைந்தமட்ட பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியும் என்றும்  மக்கள் கருத்தறியும்  குழு  பரிந்துரை செய்துள்ளமை  தொடர்பில் விளக்குகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 
பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல  இந்த விடயம் குறித்து   மேலும் குறிப்பிடுகையில் 
இனப்பிரச்சினைக்கு  தீர்வுத்திட்டமாக  வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கவேண்டும் என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது.     அவ்வாறு வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கவேண்டுமாயின்  அது மத்திய அரசாங்கத்தின்  தீர்மானமாக   அமையவேண்டும்.    ஆனால் அவ்வாறு மத்திய அரசாங்கம் இதற்கான தீர்மானத்தை எடுத்தாலும்   அது   பாரிய பாதிப்புக்களை கொண்டுவருவதாகவே அமையும். 
குறிப்பாக   வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்தால் அதன் மூலம்   கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் மக்களும்   சிங்கள மக்களும் பாதிக்கப்படுவார்கள். ஒருவேளை  கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் மக்களுக்காக      தனி அலகை வழங்கினால் அந்த மாகாணத்தில் உள்ள  சிங்கள மக்களுக்கு என்ன நடக்கும்?  எனவே வடக்கு கிழக்கு மாகாணங்களை  இணைப்பது என்பது  சாத்தியமற்றதாகும். அவ்வாறு செய்யவும் கூடாது. 
இதேவேளை   மாகாண சபைகளுக்கு  குறைந்தளவிலான பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதனை நான்  முன்னேரேயே கூறியிருக்கின்றேன்.  அதாவது   மாகாண சபைகளுக்கு குறைந்தளவிலான பொலிஸ் அதிகாரங்களை வழங்கலாம்.  ஒரு முறைமையின் கீழ் இதனை முன்னெடுக்கவேண்டும்.   
அதாவது போக்குவரத்து  குற்றங்கள்  போதைப்பொருள் குற்றங்கள் உள்ளிட்ட வற்றில்   மாகாண சபைகளுக்கு  பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியும்.    எனினும்   அவை ஒரு  முறைமையின் கீழ்  இருக்கவேண்டும். 
இது இவ்வாறு இருக்க தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ்  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் மாற்றங்கள்  கொண்டுவரப்படும் என்று நான் எதிர்பார்க்கவி்ல்லை.    காரணம்  2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு   பிரதமர் ரணில் விக்ரமசிங்க    முயற்சிக்கின்றார். எனவே   நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் மாற்றங்கள்  கொண்டுவரப்படும் சாத்தியமில்லை என்றார்.