BREAKING NEWS

முதல்வர் நஸீர் வழங்கி வைத்தமை கண்டிக்கத்தக்க செயல் என்கிறார் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்


“எனது 10 வருட முயற்சிக்கு கிடைத்த பலன்
பாலமுனை மக்களுக்கான காணி உறுதிப்பத்திரம்”சுனாமியினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு, ஆரயம்பதி- பாலமுனை மக்களுக்காக கடந்த 10 வருடகால எனது முயற்சியினால் பெற்றுக் கொடுக்கப்பட்ட காணி உறுதிப்பத்திரத்தினை, கிழக்கு முதல்வர் ஹாபிஸ் நஸீர் அஹமட் வழங்கி வைத்தமை கண்டிக்கத்தக்க செயலாகும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 
அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-
2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் மட்டக்களப்பு, ஆரயம்பதி -  பாலமுனை கிராமம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அப்போது நான் விமானநிலையம் மற்றும் விமான சேவைகள் சேவைகள் தலைவராக இருந்தேன். 
பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களை கடலோரப்பகுதியிருந்து வேறு இடத்தில் மீள்குடியேற்றுவதற்காக அப்போதைய காணி அமைச்சர் தி.மு. ஜயரட்னவை நான் தனிப்பட்ட ரீதியில் தொடர்பு கொண்டு பல விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தேன். அதன் பலனாக பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றுவதற்காக அவரது அனுமதியுடன் தனியார் காணியொன்றைப் பெற்றுக் கொண்டோம். 
 பின்னர், அரச சார்பற்ற “போரூட்”  நிறுவனத்துடன் பேச்சு நடத்தி அக்காணியில் 71 வீடுகளைக் கட்டினோம். வீடுகளைக் கட்டுவதில் நாங்கள் பல்வேறு சவால்கள் - பிரச்சினைகளை எதிர்கொண்டோம். எனினும், அவற்றுக்கு தீர்வு காணப்பட்டு வீதி, நீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை அமைத்துக் கொடுத்து இன்று அப்பிரதேசத்தில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். 
எனினும், அப்பகுதி மக்களுக்கான காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படாது இருந்தது. இது தொடர்பில் கடந்த 10 வருட காலமாக நான் எடுத்த தொடர் முயற்சியின் பலனாக அண்மையில் அவர்களது காணி உறுதிப்பத்திரங்களுக்கான அங்கீகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டு பிரதேச செயலகத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது.
இக்காணி உறுதிப்பத்திரங்களை மக்களுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கும் நிகழ்வினை மே மாதம் 26, 27 அல்லது 28ஆம் திகதிகளில் ஏற்பாடு செய்யுமாறு மண்முனைப்பற்று பிரதேச செயலாளருக்கு இம்மாத ஆரம்பத்திலேயே எழுத்து மூலம் தெரிவித்திருந்தேன். 
இந்நிலையில், இது தொடர்பில் எதுவுமே அறிந்திராத, எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாத முதலமைச்சர் நஸீர் அஹமட் “தான் வந்து இந்த உறுதிப்பத்திரங்களை வழங்கி வைக்க வேண்டும். இந்த காணி உறுதிப்பத்திரங்கள் எனது மாகாண அமைச்சின் ஊடாகவே தங்களுக்கு வந்தது” என்றெல்லாம் கூறி பிரதேச செயலாளரை தொலைபேசியில் அச்சுறுத்தியுள்ளார். 
இது தொடர்பில் பிரதேச செயலாளர் என்னைத் தொடர்பு கொண்டார். அப்போது, ‘கிழக்கு முதலமைச்சர் இந்நிகழ்வில் கலந்து கொள்வதில் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும், அவரும் நானும் கலந்து கொள்வதற்கான திகதியொன்றைக் குறிக்குமாறும்’ நான் கூறியிருந்தேன். 
இவ்வாறான நிலையில் நான் வெளிநாடு சென்றதை அறிந்த கிழக்கு முதல்வர் பலாத்காரமாகக் காணி உறுதிப்பத்திரங்களை நேற்று புதன்கிழமை அவசர அவசரமாக வழங்கி வைத்துள்ளார். 
முதலமைச்சரின் இச்செயற்பாட்டை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இது அவரது சாதாரண அரச நிர்வாக அறிவு கூட இல்லாத நிலையை எடுத்துக்காட்டுகிறது.
எங்களுக்கிடையில் கட்சி வேறுபாடுகள் இருந்தாலும் வேற்றுமையில்லாது ஒன்றாக பயணிக்கவே நாங்கள் விரும்புகிறோம். அலி ஸாஹிர் மௌலானா, அமீர் அலி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுடனும் நாங்கள் நல்ல முறையிலேயே நடந்து கொள்கின்றோம். இவ்வாறான நிலையில் முதலமைச்சர் நஸீரின் அண்மைக்கால போக்குகள் மிகவும் கண்டிக்கத்தக்கதாகவுள்ளது. பிற்போக்கான அரசியல் கலாசாரத்தை கைவிட்டு அனைவருடனும் ஒத்துழைப்புடன் செயற்படுமாறு அவருக்கு நான் ஆலோசனை வழங்குகிறேன்- என்றார். 

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar