BREAKING NEWS

இஜ்திஹாத், இத்திபாஉ, தக்லீத்...


முஸ்லிம்கள் பொதுவாக மார்க்க கிரியைகளையும், சட்டங்களையும் பின்பற்றுவதைப் பொறுத்து அவர்களை மூன்றாகப் பிரித்திட முடியும்.
1. இஜ்திஹாத் - ஒருவர் ஒரு குறிப்பிட்ட விடயத்தில் இஸ்லாத்தின் அடிப்படைகளான அல் குர்ஆனும், ஹதீஸ்களும் என்ன சொல்கின்றன என்பதை நேரடியாக ஆய்வு செய்து அறிந்து கொள்வதையே இஜ்திஹாத் என்று குறிப்பிடுவார்கள். இதன் பொழுது குறித்து ஆய்வாளர் அரபு மொழியில் தேர்ச்சி பெற்று அல் குர்ஆனிய இலக்குகளிலும், இஸ்லாத்தின் அகிலத்துவ மதிப்பீடுகளிலும் அறிதல் கொண்டு, ஹதீஸ்களை அதன் தராதரங்களுடன் அறிந்து, இறைத்தூதரின் மேன்மையான ஸுன்னா பற்றிய ஆழம் கொண்டவராகவும் இதர புத்திபூர்வமான அடிப்படைகள், ஆதாரங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவராகவும் இருப்பார். இஜ்திஹாத் மேற்கொள்பவரை பரிபாஷை ரீதியாக முஜ்தஹித் என்பார்கள்.
2. இத்திபாஉ - குறிப்பிட்ட ஒரு விடயத்தில் மார்க்கத்தின் தீர்ப்பை அறிந்து கொள்ளும் பொருட்டு நம்பிக்கையான அறிஞர்களை நாடி, அதன் பொழுது அந்த அறிஞர்கள் முன் வைக்கும் தீர்வினை அதற்கான ஆதாரங்கள் அடிப்படையில் புரிந்து கொள்ளல். இதனையே இத்திபாஉ என்பார்கள். சட்டங்களை ஆதாரங்கள் அடிப்படையில் அறிந்து பின்பற்றுபவர் முரண்பட்ட இரண்டு அறிஞர்கள் முன்வைக்கும் சட்டத் தீர்ப்புகளையும் அதன் ஆதாரங்களை அறிந்து அவற்றை ஒப்பிட்டு புரிந்து கொள்ளும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும். உதாரணமாக இமாம் ஷாபிஈ மற்றும் இமாம் அபூஹனிபாவுக்கும் இடையில், கர்ளாவிக்கும் அல்பானிக்கும் இடையில், உஸ்தாத் மன்சூரிற்கும் நவ்பர் அல் அதரிக்கும் இடையே என்று இது உலகளாவிய, உள்ளூர் வட்டங்களில் என்று விரிந்து செல்லும். இத்திபாஉவை மேற்கொள்பவரை முத்தபிஹ் என்று அழைக்க முடியும்.
3. தக்லீத் - அதாவது குறிப்பிட்ட ஒரு சட்டத் தீர்ப்பு தொடர்பாகவோ அல்ல ஒட்டுமொத்தமாகவோ ஒரு அறிஞரை கண்மூடித்தனமான நிலையில் பின்பற்றல். இதுவே தக்லீத் எனப்படும். இந்த நிலையில் தக்லீத் செய்பவர் ஆதாரங்கள் எதனையும் கவனத்தில் கொள்ள மாட்டார். குறிப்பிட்ட அறிஞர் பற்றிய நல்லெண்ணம் மற்றும் நம்பிக்கை அவரது கேள்வி, பார்வை போன்றவற்றை முடக்கி விட்டிருக்கும். தக்லீத் செய்பவர் முகல்லித் ஆவார்.
மேற்போந்த மூன்று நிலைப்பாடுகள் தவிர்த்து வேறு எதனையும் ஒரு முஸ்லிம் மார்க்க சட்டங்களை பொறுத்து மேற்கொள்ள முடியாது. இவற்றில் இஜ்திஹாத் உடைய நிலையை அடைவது அனைத்து மக்களுக்கும் சாத்தியம் இல்லை. மனிதர்களின் வித்தியாசமான அறிவுத்திறன், முஜ்தஹித் ஆவதுக்குரிய கல்வி நிலை, மக்களின் வித்தியாசமான வாழ்வியல் நிலைகள் காரணமாக உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் இஜ்திஹாத்தின் தரத்தை அடைந்திட முடிவது சாத்தியம் என்று யாருமே வாதிட முடியாது. நபித் தோழர்களின் சமூகத்தில் கூட இது சாத்தியம் இல்லை. மாறாக மக்கள் கண்மூடித்தனமாக பின்பற்றக் கூடிய - தக்லீத் செய்யக் கூடிய - முகல்லித்களாக இருப்பதும் ஏற்றுக் கொள்ளவே முடியாத அம்சம். அது மனிதனின் இயற்கை இயல்பான அறிவுக்கும், எமது மார்க்கத்தின் உள்ளார்ந்த இயல்புக்கும் முரணானது. கண்மூடித்தனமாக பின்பற்றக் கூடியவரின் நிலையை அல் குர்ஆன் கடிந்துரைக்கிறது. இந்த நிலையில் ஒரு முஸ்லிமின் நம்பிக்கையோ அல்ல மார்க்க கிரியைகளோ தக்லீத் உடைய நிலையில் வெளிப்பட முடியாது என்று உறுதி. ஆனால் உலக முஸ்லிம்களை ஒரு சீரான கல்வி மூலம் அவர்களை ஆதாரங்களை அறிந்து பின்பற்றும் முத்தபிஹ்களாக மாற்றலாம். இதுவே சாத்தியமான ஒரு அணுகுமுறை. மாறாக அன்றாட வாழ்வியல் அழுத்தங்களினால் மார்க்கத்தின் அனுஷ்டானங்களை கஷ்டப்பட்டு பின்பற்றக் கூடியவர்களுக்கு அதன் எதிர் நிலையான இஜ்திஹாத் எனப்படும் சுய ஆய்வு நோக்கி அழைத்தால், அவர்கள் அதனால் குழப்பமுறக் கூடும். இஜ்திஹாத் என்பதையே இதன் பொழுது எதிர்த்திடக் கூடும். ஆனால் மத்திம நிலையில் நின்று யோசித்தால் இத்திபாஉ என்பதை நாம் இயக்கங்கள், பள்ளிவாசல்கள், கலாபீடங்கள் ஊடாக பரவலாக்க முடியும். இதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் உள் மோதுகைகளையும் கணிசமான அளவு குறைத்திட முடியும். இத்திபாஉ எனும் நிலையில் அதன் அடுத்த நிலையான இஜ்திஹாத்தினை நோக்கி மக்கள் இயல்பாக முயன்றிடுவார்கள். இன்ஷா அல்லாஹ்.
தமிழ் பேசும் இஸ்லாமிய உலகில் இஜ்திஹாத், இத்திபாஉ, தக்லீத் இது மூன்று நிலைகள் குறித்தும் பாரிய புரிதலின்மைகள் நிலவுகிறது. அல் குர்ஆன், ஸுன்னாவை நோக்கி அழைக்கும் அழைப்பாளர்கள் தமது அரைகுறை புரிதலினால் சமூகத்தின் பொது மக்கள் தளத்தை இஜ்திஹாத் நோக்கி உயர்த்திட முனைகிறார்கள். இது பாரிய சிந்தனை சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது. குறித்த இஜ்திஹாத்திற்கான அழைப்பாளரே பல வேளைகளில் ஒரு முகல்லிதாக இருந்து விடும் அபத்தங்கள் எமது தமிழ் சூழலுக்கே உரியவை. ஒரு குறிப்பிட்ட அறிஞர் ஒரு குறிப்பிட்ட மார்க்க சட்டம் தொடர்பில் அல் குர்ஆன், ஸுன்னா இரண்டினதும் அடிப்படையில் ஆய்வு செய்து ஒரு நிலைப்பாட்டினை வைத்திடும் பொழுது அது இயல்பாகவே ஒரு மத்ஹப் ஆக மாறி விடுகிறது. அந்த கருத்தினை பின்பற்றும் ஆதரவாளர்கள் எண்ணிக்கையை பொறுத்து அந்த மத்ஹப் வளர்கிறது அல்லது தேய்கிறது. இது தான் யதார்த்தம். இதற்கு இஸ்லாமிய வரலாறே ஆதாரம்.
குறிப்பு - என்னைப் பொறுத்து நான் ஒரு முத்தபிஹ் நிலையில் இருப்பதாகவே கருதுகிறேன். எந்தவொரு மார்க்க நிலைப்பாடுகள் தொடர்பிலும் அது பற்றிய தெளிவுக்காக ஷெய்க் யூசுஃப் அல் கர்ளாவி, முஸ்தபா அஹ்மத் ஸர்கா, அப்துல்லாஹ் பின் பய்யாஹ், உஸ்தாத் அஹ்மத் ரய்ஸுனி போன்றவர்களின் கருத்துக்களையே நாடுகிறேன்.அவர்கள் அளிக்கும் ஆதாரங்களை அலசி அவற்றை ஏனைய முரண்பட்ட கருத்துக்களின் ஆதாரங்களுடன் ஒப்பிட்டே ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் எனது ஆதர்ஷ அறிஞர்களின் கருத்துக்கள் பிழையானவை என்று ஆதாரங்கள் அடிப்படையில் ஒருவர் நிறுவும் பொழுது அதனை ஏற்றுக் கொண்டு எனது இமாமின் கருத்தினை கைவிடுகிறேன். என்னைப் பொறுத்து இதுவொரு உரையாடல். சத்தியத்தை கண்டடைய முனையும் உரையாடல். அல்லாஹ் எம்மை நன்மைகளின் பால் இணைத்து வைக்கட்டும்.
From Rila Marzook Face book

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar