சாய்ந்தமருதுக்கான தனி உள்ளூராட்சிஐக்கிய நாடுகள் சபைக்கு??

சாய்ந்தமருதுக்கான தனி உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு சென்று நிறைவேற்றுகின்ற விடயமல்ல, அரசியல் தலைமைகளினால் கொடுக்கப்பட்ட வாக்குறுதி தொடர்ந்தும் மாநாட்டு தீர்மானங்களாக இருக்காமல் அது உடனடியாக நிறைவேற்றப்படுதல் வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகமும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி தெரிவித்தார்.

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் தொடர்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கோரி  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்- அமைச்சர் ரவூப் ஹக்கீம் போன்றோருக்கு சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் தொடர்ச்சியாக கடிதங்களை அனுப்பி வருகின்றது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிப்பதாவது;

"வாக்குறுதி ஒரு அமானிதமாகும். குறித்த காலத்தில் குறித்த நேரத்தில் அது நிறைவுக்கு கொண்டுவரப்படுதல் வேண்டும். மாறாக தொடர்ந்தும் அது மாநாட்டு தீர்மானங்களாக இருக்ககூடாது என வலியுறுத்தி சொல்ல விரும்புகிறேன்.

பிரதமர் ரணில் மற்றும் எமது முஸ்லிம் காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதியின் பிண்ணனியில் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் சமூகம், சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் போன்ற சிவில் அமைப்புகளின் அழுத்தங்கள் பிரதானமாக இருந்துள்ளன. என்னைக்கூட பலதடவை அந்த அமைப்பு சந்தித்து இது குறித்து பேசி இருக்கிறது. அதனை தொடர்ந்தே கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது பாராளுமன்ற தேர்தல் முடிந்த கையோடு அக்கோரிக்கை நிறைவேற்றி தரப்படும் என நாம் அழுத்தம் திருத்தமாக சொல்லியிருந்தோம். அவ்வாறே ரணிலின் வாக்குறுதியினை மக்களுக்கு பெற்றுக்கொடுத்தோம். ஆனால் இதுவரைக்கும் அது நிறைவுக்கு கொண்டு வரப்படாமல் இருப்பது குறித்து நான் கவலைப்படுகிறேன்.

இந்த உள்ளூராட்சி மன்ற கோரிக்கையானது அந்த மக்களின் அடிப்படையான மிகவும் குறைந்தபட்ச கோரிக்கை. இதனை நிறைவெற்றிக் கொடுக்க இதுவரை காத்திரமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதாக தெரியவில்ல்லை. வெறும் சாக்குப்போக்குகள் சொல்லப்பட்டு கொண்டு வருவதையே எம்மால் அவதானிக்க முடிகிறது.

எல்லை நிர்ணணயம் என்பது எதிர்காலத்தில் உள்ளூராட்சித் தேர்தல் நடாத்துவதற்கான முறைமையில் உள்ள ஒரு பிரச்சினையாகும். அதற்கும் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற பிரகடனத்துக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை. அதனை காரணம் காட்ட வேண்டிய எந்த அவசியமும் இல்லை. எல்லை நிர்ணயம் முடிந்து அதன் பிற்பாடுதான் அது வழங்க முடியும் என்றால் எமக்கு எதற்கு அரசியல் அதிகாரம்? எதற்கு அமைச்சரவை அமைச்சு பதவி என கேட்க விரும்புகிறேன்.

இந்த கோரிக்கை ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு சென்று நிறைவேற்றுகின்ற விடயமல்லவே. உள்ளூராட்சி அமைச்சர் தனகுள்ள அதிகாரத்தை கொண்டு செய்கின்ற ஒரு சாதாரணமான விடயமாகும். பிரதமருடன் அல்லது ஜனாதிபதியுடன் பேசி ஓரிரு நாட்களுக்குள் அதனை இலகுவாக செய்ய முடியும். நம்மிடமுள்ள அரசியல் அதிகாரத்தை நாம் பயன்படுத்த வேண்டும் அதனை வைத்துக் கொண்டு கையாலாகாதவர்களாக இருந்து விடக்கூடாது. இது விடயத்தில் அந்த ஊர் மக்களின் வாக்குகளை பெற்ற உள்ளூர் அராசியல் தலைமைகளுக்கும் பாரிய பொறுப்பு இருக்கிறது. எல்லோருக்கும் தார்மீக கடமை இருக்கிறது. அந்த மக்களின் வாக்கை பெற்றுவிட்டு வாய்மூடி மௌனியாக இருந்துவிட முடியாது.

சாய்ந்தமருது மண் இந்த கட்சியை வாழவைத்த மண். இன்றும் அவ்வாறுதான் இருக்கிறது. ஆனால் அவர்களின் தேவை இதுவரைக்கும் பூர்த்தி செய்யப்படாமல் இருப்பது குறித்து எனது ஆதங்கத்தினை சொல்ல வேண்டிய தருணம் இதுவென நினைக்கிறேன். இன்னும் இன்னும் வாக்குறுதி, தீர்மானங்கள் என்றில்லாமல் புரையோடிப்போயுள்ள இப்பிரச்சினைக்கு மிக விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

இன்று சமூகத்திற்கான பல்வேறு விடயங்கள் வெறும் மேடைக் கோசங்களாகவே இருந்து வருகின்றன. குறைந்தபட்சம் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற கோரிக்கையாவது நிறைவுக்கு கொண்டுவர காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன். கடந்த காலங்களில் மஹிந்த ஆட்சியில் இருந்தபோது சமூகத்தின் மீது அக்கறை கொண்டு நான் வழங்கிய காத்திரமான அழுத்தம்தான் இன்று நல்லாட்சியினை எமது மக்கள் சுவைக்க கூடியதாக இருக்கிறது. அதுபோலவே சாய்ந்தமருது மக்களுக்கான விடிவுக்காக தேவை எழுகின்றபோது பேசும் குரலாகவும் நான் இருப்பேன்" எனவும் குறிப்பிட்டார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்