முஸ்லிம் காங்கிரசின் வடமாகாண சபை உறுப்பினர் ரயீஸுக்கு அகதி முஸ்லிம் ஒருவரின் பகிரங்கக் கடிதம்

.
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நான் புத்தளத்தில் தனியார் தொழில் புரியும் ஒரு அகதி. மன்னார் மாவட்டத்தின் எருக்கலம்பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட நீங்கள் ஒரு சிறந்த வர்த்தகர். எனினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உங்களை அரசியலுக்குள் நுழைத்து மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடச் செய்ததால் நீங்கள் வெற்றி பெற்றீர்கள்.
சமூகத்திலே உங்களுக்கு பற்றிருந்தாலும் அநேகமான நாட்கள் நீங்கள் ஜப்பானில் உங்கள் குடும்பத்துடன் கழிப்பதால் இடைக்கிடைதான் வாடமாகாணசபை அமர்வுகளில் பங்கேற்றுக் கொள்கிறீர்கள். ஆனால் வடமாகாண முஸ்லிம்களின் இருப்புத் தொடர்பாக நீங்கள் சபைக் கூட்டங்களிலோ, வேறு எந்த நிகழ்வுகளிலோ அக்கறை கொண்டு கதைத்ததாக நாங்கள் கேள்விப்படவில்லை.
கெளரவ ரயீஸ் அவர்களே, இணையத்தளம் ஒன்றில் உங்கள் தேசியத்தலைவர் ஹக்கீம் வடமாகாண முஸ்லிம்களை கௌரவமாகவும், அடிப்படை வசதிகளுடனும் குடியேற்றத் திட்டங்கள் வகுக்கின்றார் எனவும் அது தொடர்பான ஆவணங்களை முன்னாள் எம்.பி முத்தலிப் பாவா பாரூக், முஸ்லிம் காங்கிரசின் வெளிவிவகாரப் பணிப்பாளர் சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ் ஆகியோர்களுடன் இணைந்து சேகரிக்குமாறும் தலைவர் ஹக்கீம் பணித்துள்ளதாக இணையத்தளத்தில் பதிவு செய்துள்ளீர்கள். இது நல்ல விடயம்தான். உங்கள் தேசியத் தலைவர் ஹக்கீமும், பிரதித் தலைவரும் மன்னார் தீவுக்கு பொறுப்பாளருமான ஹரீசும் வன்னி மண்ணில் கால்பதிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளீர்கள். வன்னி மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் உங்கள் தேசியத் தலைவர் எடுத்துள்ள முயற்சிக்கு நல்ல ஜாம்பவான்கள் கிடைத்துள்ளார்கள். கடந்த தேர்தலில் மண் கவ்விய சட்டத்தரணி பாரூக்கும், அகதி என்று கூற வெட்கப்படும் சட்டத்தரணி பாயிசும்,குப்பை கூளங்களால் நிரம்பி வழியும் கல்முனையை சீர்திருத்த முடியாத ஹரீசும் வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தில் அக்கறை கொள்வதுதான் நமக்குப் புரியவில்லை.
வன்னி மாவட்டத்தில் மர்ஹூம் நூர்தீன் மசூரின் மறைவின் பின்னர் அந்த மாவட்டத்தை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக பிரதிநிதித்துவப்படுத்த பொருத்தமான எவரும் இதுவரை கிடைக்காத நிலையில் அதே எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த உங்களை, ஹக்கீம் தேர்ந்தெடுத்தமை ஓரளவு நியாயமானதுதான்.
காலத்துக்குக் காலம் வடக்கு முஸ்லிம்களையும், குறிப்பாக வன்னி அப்பாவி முஸ்லிம்களையும் ஏமாற்றி வரும் ஹக்கீம் தற்போது, மீண்டும்  அவர்களை ஏமாற்ற எத்தனிக்கும் முயற்சியாகவே இந்த புதிய எண்ணத்தை நாம் பார்க்கிறோம்.
அவரின் இந்தக் கபடத்தனத்துக்கு ஏதும் அறியாத நீங்கள், போடுகாலியாக மாறி இருக்கின்றீர்கள். மர்ஹூம் அஷ்ரப், மர்ஹூம் மசூர், முன்னாள் பிரதி அமைச்சர் அபூபக்கர் ஆகியோர் வடமாகாண முஸ்லிம்களின் நல்வாழ்வுக்காக பாடுபட்டதை நாம் இன்னும் நினைத்துப் பார்க்கிறோம். ஆனால் உங்கள் தேசியத் தலைவர் ஹக்கீம் இந்தக் கட்சியைப் பொறுப்பேற்றதன் பின்னர் நமக்கு என்ன செய்திருக்கின்றார்? உங்கள் மனச்சாட்சியைத் தொட்டு கேட்டுப் பாருங்கள். அல்லது எருக்கலம்பிட்டி பள்ளிவாயல் மரைக்கார்மாரிடமவாது கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
சந்திரிக்காவின் இரண்டாவது பதவிக் காலத்தில் வர்த்தகவாணிபத்துறை, கப்பல் துறை, துறைமுகம், முஸ்லிம் சமய விவகாரம், ஆகிய விடயங்களை உள்ளடக்கிய மிகவும் பலம் வாய்ந்த அமைச்சுப் பொறுப்பொன்று உங்கள் தலைவருக்கு வழங்கப்பட்டதை நீங்கள் அறிவீர்களோ தெரியாது. பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர் கொழும்பு கொள்ளுப்பிட்டிகாணிவேல் வாசஸ்தலத்துக்கு விரைந்த தலைவரை வரவேற்க அப்பாவி முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள், தொண்டர்கள், பிரமுகர்கள், காத்திருகின்றனர். அவர்கள் மத்தியிலே முஸ்லிம் சமூகத்தின் விடிவுக்காக அஷ்ரபின் வழியில் பயணிக்கப் போவதாக அவர் சூளுரைத்தார். தனக்கிருக்கும் அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தப்போவதாக அறிவிக்கிறார். ஆனால் முஸ்லிம் சமூகத்துக்காக அவர் எதையும் செய்ததாக எமக்குத் தெரியவில்லை. குறிப்பாக அகதி முஸ்லிம்கள் ஒருவருக்கேனும் அவர் உதவி செய்ததாக எங்களுக்கு நினைவில்லை. தேர்தல் காலத்தைத் தவிர எந்தக் காலத்திலாவது அவர் நமது பிரதேசத்துக்கு வருவதுமில்லை, எந்த அகதி முகாமுக்கும் சென்றதுமில்லை. துறைமுகத்தில் எத்தனை அகதி முஸ்லிம்களுக்கு அவர் வேலை வழங்கியுள்ளார்? கப்பல் தொழிலில் எமக்கு வேலை தந்துள்ளாரா? எந்தவொரு அகதியைத்தானும் முஸ்லிம் சமய விவகார அமைச்சினூடாக இலவசமாக ஹஜ்ஜுக்கு அனுப்பி வைத்தள்ளாரா?நமது ஆலிம்கள், உலமாக்கள், முஅத்தீன்களின் நல்வாழ்வுக்காக ஏதாவது உருப்படியான திட்டங்களை செய்துள்ளாரா? தபால் அமைச்சராக இருந்தாரே, எமக்கு என்ன செய்தார்? குறைந்தது ஒரு போஸ்ட் மேன் பதவியைத்தானும் தந்தாரா? நீதி அமைச்சரகாக இருந்த அவர், ஒரு செகியுரிடி வேலையைத்தானும் அகதி ஒருவருக்குக்   கொடுத்துள்ளாரா?
அவரது வாழ்க்கையே பித்தலாட்டமும், வீறாப்புப் பேச்சும்தான். திருகுதாளங்களாலும், கபடத் தனங்களாலும் கிடைத்த தலைமைத்துவம் என்பதால் மற்றைய அரசியல்வாதிகளை வீழ்த்துவதே இவரது சிந்தனை.
25வருடகாலம் வடக்கு முஸ்லிம்கள் மீது வராத அக்கறை, இப்போது ஏன் புதிதாக முளைத்திருக்கின்றது?முஸ்லிம்களை குடியேற்ற இப்போதுதான்ஆவணம் திரட்ட புறப்பட்டிருக்கிறார். ஜப்பானில் நடைபெற்ற அரசு புலிகள் பேச்சு மேசையில் முஸ்லிம் அகதிகள் தொடர்பான ஆவணங்கள் எங்கே? என்று அன்டன் பாலசிங்கம் கேட்டபோது முழித்து நின்ற ஹக்கீம், அதன் பின்னராவது ஆவணங்களைத் திரட்டி இருக்க வேண்டும்.
வடமாகாண முஸ்லிம்கள் தொடர்பில் ஒருமுறை அவரது ஸ்டென்மோ கிரசன்ட் வாசஸ்தலத்தில், மர்ஹூம் நூர்தீன் மசூர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் மீள்குடியேற்றம் தொடர்பில் எத்தனயோ உறுதி மொழிகளை ஹக்கீம் வழங்கிய போதும், இற்றைவரை எதுவுமே நடைபெறவில்லை. வேண்டுமென்றால் சம்மாந்துறை நௌசாத்திடமும், மன்னார் பாயிசிடமும் இதனைக் கேட்டுப் பாருங்கள். 


Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்