வடக்கு கிழக்கு இணைப்புக்கு இடம் கொடுக்க மாட்டேன்- ஜனாதிபதி- உலமா கட்சி பாராட்டு

தனது ஆட்சியில் வடக்கு கிழக்கு இணைப்புக்கு இடம் கொடுக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கூறியிருப்பதை முஸ்லிம் உலமா கட்சி பாராட்டி இருப்பதுடன் இதுதான் 68வது சுதந்திர இலங்கையின் மிகச்சிறந்த வார்த்தை எனவும் குறிப்பிட்டுள்ளது.
இது பற்றி அக்கட்சி மேலும் குறிப்பிட்டதாவது,
இந்த நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பும் பின்பும் கிழக்கு மாகாணம் தனி மாகாணமாகவே இருந்தது. இம்மாகாணத்தின் தலைநகரமாக ஒரு காலத்தில் கல்முனை திகழ்ந்தது. 1987 இலங்கை இந்திய ஒப்பந்தம் காரணமாக சுதந்திர கிழக்கு மாகாணம் இரவோடிரவாக வடக்குடன் இணைக்கப்பட்டது. இது பற்றி அன்றைய முஸ்லிம் அமைச்சர்கள் எதிர்க்க முடியாத அளவு கையாலாகா தன்மையுடன் இருந்தார்கள். இந்த ஒப்பந்தம் முஸ்லிம் சமூகத்தின் மீது எழுதப்பட்ட அடிமை சாசனம் என்றம் அதனை நிராகரிக்கிறோம் எனவும் வீறாப்புடன் கூறிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனக்கு இந்தியாவிடமிருந்து கிடைத்த சில “டீல்” கள் காரணமாக ஒரே இரவில் இவ் ஒப்பந்தத்தை ஏற்று மாகாண சபை தேர்தலில் குதித்தது. தமது துரோகதனத்தை மறைக்க இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லிம்களுக்கு தனி மாகாணம் என முஸ்லிம்களிடம் சொல்லி அவர்களை “பே”க்காட்டியது.  ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட போதாவது இதனை ஏற்பதாயின் முஸ்லிம்களுக்கு தனி மாகாணம் என்பதை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டாலேயே இதனை ஏற்போம் என்றாவது மு. கா அன்று சொல்லியிருக்கலாம். அவ்வாறு நடக்கவில்லை என்பது அக்கட்சியின் கறைபடிந்த வரலாற்றின் முதல் நினைவாகும்.

இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லிம் தனி மாகாணம் என்ற மு. கா வின் கோரிக்கை கடைசியல் தனி அலகாக மாறி பின்னர் அம்பாரை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களை மட்டும் உள்ளடக்கிய தென்கிழக்கு அலகாக மாறியது. ஆனாலும் அன்றிருந்த சூழ்நிலை என்பது மீண்டும் கிழக்கு பிரியாது என்றிருந்ததால் வேறு வழியில்லை என முஸ்லிம்கள் தமது இயலாமையினால் அமைதி காத்தனர். இந்த நிலையில் கிழக்கு பிரிய வேண்டும் என்பதை அன்று முதல் நாம் குரல் கொடுத்தோம்.
பின்னர் 2008ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் கிழக்கு கிரிக்கப்பட்டு கிழக்கு மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் மீண்டும் மிகப்பெரிய சுதந்திரத்தை பெற்றனர். தற்போது மீண்டும் கிழக்கை வடக்கோடு இணைக்க அதே மாதிரியான டீல்களை மு. கா செய்து வரும் துரோகத்தனமான நிலையில் ஜனாதிபதியவர்கள் தான் ஆட்சியில் இருக்கும் வரை வடக்கு கிழக்கை இணைய விட மாட்டேன் என சொல்லியிருப்பதை உலமா கட்சி பெரிதும் பாராட்டுவதுடன் ஜனாதிபதியின் இத்தகைய துணிச்சலான கருத்து முஸ்லிம்களுக்கு நிம்மதியளிக்கிறது என்று சொல்கின்றோம். அதே போல் ஜனாதிபதியின் இக்கருத்துக்காக அவரை பகிரங்கமாக பாராட்டு முஸ்லிம் காங்கிரஸ் முன் வரவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்