மக்கா இலங்கை இல்லம் பற்றி முஜிபுர்ரஹ்மானின் கருத்து பிழையானது. -சாதிக் ஹாஜியின் அறிக்கை

அண்மையில் சஊதி அரேபியாவிலிருந்து வெளிவரும் அரப் நியூஸ் பத்திரிகையில் வெளியான முஜிபுர் ரஹ்மான் என்பவரின் மக்காவில் உள்ள இலங்கை ஹஜ் இல்லம்; சம்பந்தமான செய்தியில் உண்மைக்குப்புறம்பான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளதாகவும் இதில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் பிழையான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளதாகவும் மக்காவில் வாழும் ஷேக் முஹம்மத் சாதிகான் அஸ்ஸைலானி அவர்கள் அரப் நியூஸ் பத்திரிகைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்  குறிப்பிட்டுள்ளார். அவர் அக்கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது,
அண்மையில் முதன் முறையாக மக்காவுக்கு வந்திருந்த இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர்ரஹ்மான் மக்காவிலுள்ள ஹஜ் இல்லத்தை இலங்கை அரசு கவனிக்காமல் விட்டிருப்பதோடு அதனை மக்காவில் உள்ள தனிப்பட்ட ஒருவர் மீது நம்பிக்கை வைத்து விட்டிருப்பது ஆச்சர்யமாக உள்ளது எனவும் எனது பெயரை நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக குறிப்பிட்டிருந்ததுடன் இலங்கை அரசு அதனை மீள பெற வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இதன் படி இது பற்றிய தெளிவை இங்கு நான் தருகின்றேன்.
01. மேற்படி வக்பு இல்லம் 138 என்ற வக்பு இலக்க ரசீதின் படி 1383 (1963)ம் ஆண்டு விலைக்கு வாங்கப்பட்டது. இதன் பரப்பளவு இரண்டு பேச்சஸ் ஆகும். இதில் ஒரு அறை ஒரு கழிவறை என்பன கீழ் மாடியிலும் அதே போல் முதலாம் மாடியிலும் இரண்டாம் மாடியிலும் உள்ளது.
02. மேற்படி இல்லம் பின்வரும் வக்பு நிபந்தனைக்கமைய பெறப்பட்டதாகும். அதாவது, முஹர்ரம் மாதம் முதல் ரமழான் வரை குர்ஆன் பாடசாலை நடத்துவதுடன் இலங்கையிலிருந்து வரும் ஏழை ஹாஜிகளை ஒவ்வொரு வருடமும் இரண்டு மாதங்களுக்கு தங்க வைப்பதுமாகும்.
03. அதன் பின்னர் மக்காவில் உள்ள ஷரீயா நீதி மன்றம் இலங்கையிலிருந்து வரும் ஏழை ஹாஜிகளை ஒரு மாதத்துக்கு மட்டும் தங்க வைக்க முடியும் என சட்ட திருத்தத்தை 1963 ம் ஆண்டு செய்தது.
04. இதற்கு பொறுப்பாக முன்னர் நியமிக்கப்பட்டிருந்தவர் சுமார் 46 வருடங்களாக இதனை வக்பு சட்டப்படி குர்ஆன் பாடசாலையாக நடத்தவுமில்லை, ஏழை இலங்கை ஹாஜிகளை தங்க வைக்கவுமில்லை. இது பற்றி இலங்கை அரசாங்கமும் விசாரிக்காது மக்கள் மன்றத்தில் மட்டும் அவ்வப்போது சிலர் கருத்துத்தெரிவிப்பதுடன் நிறுத்திக்கொண்டனர். அது போன்றதே தற்போதைய கருத்துமாகும்.
05. இலங்கை ஹஜ் கமிட்டி தனது வைத்திய அதிகாரிகளை தங்க வைப்பதற்காக மேற்படி இல்லத்தை இதற்கு முன்னரான பராமரிப்பாளரிடமிருந்து வாடகைக்கு எடுத்திருந்தது.
06. பின்னர் 1428 (2008) ம் ஆண்டு அதாவது சுமார் 09 வருடங்களுக்கு முன் கௌரவ அலவி மௌலானா மற்றும் அமைச்சர் பௌசி ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் பேசி மேற்படி இலங்கை இல்லத்தை இலங்கை ஹஜ் கமிட்டியின் பராமரிப்பில் கொண்டு வர சஊதி அரசை வேண்டினர். ஆனாலும் சஊதிகளுக்கு சொந்தமில்லாத மற்றும் வக்பு செய்யப்பட்ட சொத்து விடயத்தில் சஊதி அரசு தலையிட முடியாது என சஊதி அரசால் முன்னாள் ஜனாதிபதிக்கு 5606 எனும் இலக்கம் கொண்ட கடிதம் 17.4.1428 (2008) ம் ஆண்டு அனுப்பி வைக்கப்பட்டது.
07. இவ்வாறு இதற்கு முடியாமல் போன போது கௌரவ அலவி மௌலானா மற்றும் கௌரவ அமைச்சர் பௌசி, முன்னாள் சஊதிக்கான இலங்கை தூதுவர் மர்லின் ஆகியோர் மேற்படி இல்லத்தை எனது பராமரிப்பில் மீளப்பெற முயற்சி எடுக்கும்படி நான் இலங்கையை சேர்ந்த சஊதி பிரஜா உரிமை பெற்றவன் என்ற வகையில் என்னை வேண்டிக்கொண்டனர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கையின் சட்டத்தரணியான முஹம்மது யூசுப் நசார் என்பவரினால் 22.7.2008ல் எழுதப்பட்ட சாசனத்தின்படியும் எதற்காக வக்பு செய்யப்பட்டதோ அதனை சரி வர நிறைவேற்றும் எனது பணியில் யாரும் எனக்கு தலையீடு செய்யக்கூடாது என்ற எனது நிபந்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கிணங்கவும் மக்கா ஷரீயா நீதி மன்றத்தில் இது பற்றி வழக்காடுவதற்காக  எனது சொந்தப்பணத்தில் இரண்டு லட்சத்து ஐம்பதினாயிரம் ரியால் மக்காவின் சட்ட பிரதிநிதிக்கு வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியான வழக்காடலின் பின்னர் மேற்படி வக்பு இல்லத்தின் பராமரிப்புக்கு 16.01.1432 திகதியில் 32.100.2 எனும் சட்ட இலக்கப்படி நான் நியமிக்கப்பட்டேன்.

நான் அதனை பாரமெடுத்த போது நீண்ட காலமாக அது பாவிக்கப்படாமல இருந்ததன் காரணமாக பாழடைந்து காணப்பட்டதுடன் தண்ணீர், மின்சார, பரிபாலன மீள் தேவைக்குட்பட்டதாக இருந்தது. இதன் காரணமாக இதனை திருத்தியமைக்க மேலும் நான் இரண்டு லட்சம் ரியால் செலவு செய்ய வேண்டி வந்தது. இந்த நிலையில் மக்கா ஹரம் விஸ்தரிப்புக்காக மேற்படி இடத்தை அரசாங்கம் எடுத்தது. இதற்கு நஷ்ட ஈடு பெறுவதற்காக நான் கடுமையாக முயற்சி செய்தேன். சுமார் ஒரு வருடத்தின் பின் இதற்கான நஷ்ட ஈடாக 26140220 ரியால் கிடைக்கப்பெற்றது. பின்னர் இத்தொகைக்காக இன்னொரு இடம் வாங்குவதற்காக சட்டப்படி நான் முயற்சி செய்து அஸீஸிய்யாவில் இத்தொகைக்கு இடம் வாங்கப்பட்டது. அதன் பின் தொடர்ச்சியாக ஒரு வருட முயற்சியின் பின் தற்போதைய இடம் 18374344  ரியால் தொகையில் மக்கா ஷரீயா நீதிமன்றத்தினூடாக வாங்கப்பட்டது.
அதன் பின் இவ் இல்லம் எதற்காக வக்பு செய்யப்பட்டதோ அதற்காக பாவிக்கப்பட தொடங்கியது. இங்கு குர்ஆன் வகுப்புக்கள் நடத்தப்படுவதுடன் இலங்கையிலிருந்து வரும் ஏழை மற்றும் புதிய முஸ்லிம் ஹாஜிகள்   தங்க வைக்கப்படுகிறார்கள். இது பற்றி முஸ்லிம் சமய கலாசார திணைக்களமும் அதற்கான அமைச்சர் ஹலீமும் நன்கு தெரிந்து வைத்துள்ளனர்.
ஆகவே சட்டப்படி நான்  இந்த இல்லத்தை வக்பு சட்டப்படி; மீண்டும் ஒப்படைக்க தயாராக இருக்கிறேன். அதனை நான் வைத்திருக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. நான் அதன் பராமரிப்பாளனாக நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ளேன். ஆகவே உண்மை என்னவென தெரியாமல் இது பற்றி சிலர் ஊடகங்களில் பேசுவது கவலையானது. இது பற்றி இலங்கை மக்களுக்கு தெளிவுறுத்துவதற்காக இதனை எழுதுகின்றேன்.

- அஷ்ஸேக் முஹம்மது சாதிஹான் அஸ்ஸைலானி
தமிழில்: முபாறக் அப்துல் மஜீத் மௌலவி

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்