விக்னேஸ்வரன் வெளிப்படையாக பேசுபவர் - அமைச்சர் றிசாத் பதியுதீன்தமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரித்தாளும் தந்திரத்துக்கு தமிழ்த் தலைமைகள் துணைபோகக் கூடாதெனவும், பெரும்பான்மை இனத்தின் சூழ்ச்சிகளுக்குள் அகப்படக் கூடாது எனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று காலை உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் அதன் இணைத்தலைவர்களான  அமைச்சர் றிசாத் பதியுதீன், முதலமைச்சர் விக்னேஸ்வரன், மஸ்தான் எம்.பி. ஆகியோரின் தலைமையில் முல்லைத்தீவில் நடைபெற்ற போது அமைச்சர் றிசாத் தமது ஆதங்கங்களையும், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளையும் வெளிப்படுத்தினார்.
இதன் போது அமைச்சர் கூறியதாவது,
இந்த மாவட்ட அபிவிருத்திச் சபைக் கூட்டத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் பங்கேற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. நீதியரசராக இருந்து அவர் ஓய்வு பெற்றபோது அவரது பேச்சை பத்திரிகைகளில் படித்து நான் பெருமிதம் அடைந்திருக்கின்றேன்.ஜனாதிபதியாக இருந்தால் என்ன, பிரதமராக இருந்ததால் என்ன, தனது கட்சி சார்ந்தவர்கள் யாராக இருந்தால் என்ன, மனதில் ஒன்றை வைத்து வெளியில் ஒன்றைப் பேசும் சுபாவம் கொண்டவர் அவர் அல்லர். அரசுக்கு முன்னால் ஒரு பேச்சும், மக்களுக்கு மத்தியில் வேறொரு பேச்சும் பேசுபவரும் அல்லர்.
இந்த சந்தர்ப்பத்தில் முதலமைச்சரிடமும், இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கும் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோரிடமும் ஒன்றைக் கூற விரும்புகின்றேன். வடமாகாணத்தில் ஒரே மொழி பேசும் உங்கள் சகோதரர்களான முஸ்லிம்கள் இங்கிருந்து வெளியேறி, சுமார் 25 வருடங்களாக அகதி முகாம்களில் வாழ்க்கை நடத்துகின்றனர். அவர்கள் மீளக்குடியேற இங்கு வரும் போது எத்தனை தடைகள், எதிர்ப்புக்கள், சவால்கள் ஆகியவற்றுக்கு முகம்கொடுக்கின்றார்கள் என்பதை உங்களில் மனச்சாட்சி உள்ளவர்களுக்கு நன்கு தெரியும். ஆனால், அந்த மக்கள் இங்கு குடியேற வரும்போது முஸ்லிம்கள் காணியைப் பிடிக்கின்றார்கள், காட்டை அழிக்கின்றார்கள், பிற மாவட்டத்திலிருந்து குடியேற வருகின்றார்கள் என்று கூறும் சில அரசியல்வாதிகள் இந்த மண்ணில் போற்றப்படுகின்றார்கள், பாராட்டப்படுகின்றார்கள். இதுவே எனக்கு வேதனையாக இருக்கின்றது. நாம் காணி பிடிக்கும் சமூகம் அல்ல.
இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டு வவுனியாவுக்கு ஓடோடி வந்தவர்களை அரவணைத்து மெனிக்பாமில் குடியேற்றியவன் நான். அரசாங்க அதிபர்களான வேதநாயகமும், பத்திநாதனும் எனக்கு இந்த விடயத்தில் கைகொடுத்து உதவினர். அப்போது எந்த இணைத்தலைமையும் இருக்கவில்லை.தன்னந்தனி தலைமையாகவே அரசாங்கத்தின் கொள்கையை நான் செயற்படுத்தினேன். அவர்களுக்கு உதவினேன். பின்னர் இந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காக நான் பட்டபாடுகள், வேதனைகள் வார்த்தைகளால் சொல்ல முடியாது.
உடைந்த கட்டிடங்களையே கொண்டிருந்த அந்தப் பிரதேசத்தில் நாம் பத்தாயிரம் வீடுகளை அமைத்துக் கொடுத்தோம். ஆனால் இந்தப் பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீளக்குடியேற வந்தபோது, ஓரங்குலக் காணியேனும் நீங்கள் விட்டுக்கொடுத்தீர்களா? என்பதை மனச்சாட்சியைத் தொட்டுக் கேளுங்கள். முஸ்லிம் கிராமமான தண்ணீரூற்றில் உள்ள பாடசாலை வளவில் இன்னும் பல தமிழ்க் குடும்பங்கள் வாழ்கின்றனர். நாம் அவர்களை பலாத்காரமாக வெளியேற்ற விரும்பவில்லை. அவர்களுக்கு மாற்றுக் காணிகளைக் கொடுத்துவிட்டு எமக்கு பாடசாலையைத் தாருங்கள் என்றே இன்னும் கேட்கின்றோம்.
நான் ஒருபோதும் தமிழரின் போராட்டத்துக்கு இடைஞ்சலாக பேசியதில்லை. அது தொடர்பில் எந்தப் பதிவும் இல்லை. அபிவிருத்தி, காணிகள் தொடர்பான பிரச்சினை, இராணுவத்தின் ஆக்கிரமிப்பு ஆகியவை பற்றியே நாம் பேசுகின்றோம். அது தமிழருக்கும், முஸ்லிம்களுக்கும் பொதுவான ஒன்று.
ஒற்றுமையாக இருந்த தமிழ் முஸ்லிம் சமூக உறவு இன்று ஆயுதத்தினால் பிரிக்கப்பட்டுள்ளது.
விக்னேஸ்வரன் ஐயா அவர்களே, தமிழர்களின் உரிமை, சமஷ்டி ஒற்றையாட்சி, அரசியல் தீர்வு, என்றெல்லாம் நீங்கள் பேசுகின்றீர்கள். தமிழர், முஸ்லிம் என்று பிரித்துப் பேசாமல் தமிழ்ப் பேசும் மக்கள் என்ற அடைமொழிக்குள் நம்மை இணைத்துக்கொண்டால் நாம் உரிய இலக்கை அடைய முடியும் என்பதை தயவாக கூற விரும்புகிறேன். ஆயுதப் போராட்டத்தில் அடைய முடியாத ஒன்றை, நமது தமிழ் பேசும் சமூகம் அடைவதற்கு நாம் பக்கபலமாக இருப்போம். வடக்கிலே வாழும் அத்தனை தமிழ்த் தலைமைகளும், தமிழ் அரசியல்வாதிகளும் எங்களை மனிதாபிமானத்துடன் நோக்குங்கள். உண்மையாக நேசியுங்கள். எல்லோரையும் அணைத்துக்கொண்டு செல்வதன் மூலமே நாம் அடைய இருக்கும் அடைவை, உண்மையான இலக்கை எட்ட முடியும். உசுப்பேற்றிப்  பேசுவதால் இன்னும் பகைமையே கூடும்.

எனவே நான் மிகவும் அன்பாகவும், பணிவாகவும் வேண்டுவது என்னவென்றால், 25 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிருந்து விரட்டப்பட்ட ஒரு சகோதர சமூகத்தை வேற்றுக் கண்ணுடன் பார்க்காதீர்கள். அவர்கள் மீள்குடியேற இடைஞ்சலாக இருக்காதீர்கள். அந்த மீள்குடியேற்றத்தைத் தடுக்கும் உங்கள் சமூகத்தைச் சார்ந்த ஒரு சில அரசியல்வாதிகளை ஊக்குவிக்காதீர்கள். இதுதான் எங்கள் சமூகம் சார்ந்த கோரிக்கையாகும். தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருப்பதே எல்லோருக்கும் பக்கபலம். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் அடுத்த அமர்விற்கு முன்னதாக வடபுல முஸ்லிம் சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வை பெற்றுத் தருவீர்கள் என நான் நம்புகிறேன்.  

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்