கல்முனையின் குடியிருப்பு - சவளக்கடை வரை ஐம்பது அடி விஸ்தீரணமுள்ள பாதை போடப்பட வேண்டும்.

கல்முனை புதிய நகரத்திட்டத்துக்கு கல்முனை வாழ் தமிழ் மக்கள் தமது எதிர்ப்பை காட்டியுள்ளமை கவலை தரும் விடயமாகும். இது தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்குமிடையிலான இடைவெளியை மேலும் தூர மாக்கும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளதாவது,
கல்முனை மக்கள் மத்தியில் இனவாதத்தை விதைத்தவர்கள் இன்று அவற்றின் திணையை அறுக்க வேண்டியுள்ளது. கல்முனை மாநகரசபையில் தமிழ், முஸ்லிம் இணைந்த கூட்டுக்கட்சியை ஆட்சியில் அமர்த்துவதன் மூலம் தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்பதை நாம் பல காலமாக சொல்லி வருகிறோம். முஸ்லிம் ஒருவர் கல்முனை மாநகர சபையின் மேயராகவும்; பிரதி மேயராக தமிழர் ஒருவரும் இருக்கத்தக்க வகையில் புதியதோர் முஸ்லிம் தமிழ் கூட்டமைப்பொன்று ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை நீண்ட காலமாகவே உலமா கட்சி சொல்லி வருகிறது. இதற்கு முஸ்லிம்கள் மட்டுமல்ல தமிழர்களும் செவி சாய்க்காமை பெரும் இழப்பாகும். ஒரு சில அரசியல்வாதிகளின் சொந்த நலவுகளுக்காக இன்று பல மக்கள் இன்னமும் இருட்டில் வாழ வேண்டியுள்ளது.
கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரசும் தமிழ் கூட்டமைப்பும் இணைந்து ஆட்சியமைத்து அமைச்சுப்பதவிகளை பங்கு வைக்க முடியும் என்றால் கல்முனையில் மட்டும் இது சாத்தியமில்லாதிருப்பது ஏன்? இதற்கு இரு தரப்பிலுமுள்ள சுயநல அரசியல்வாதிகளே காரணமாகும் என்பதை தமிழ் முஸ்லிம் பொது மக்கள் கூட இன்னமும் புரியாமல் இருப்பது மிகப்பெரிய சோகமாகும்.
ஆகவே கல்முனையில் தமிழ் முஸ்லிம் இணைந்த ஆட்சி பற்றி அவசியம் இரு சமூகமும்; சிந்திக்க வேண்டும். கல்முனை அபிவிருத்தி பெற்றால் இரு சமூகங்களுக்குமே வெற்றி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இன்றுள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரசாலோ தமிழ் தேசிய கூட்டமைப்பாலோ கல்முனை புதிய நகர திட்டத்தை முன்னெடுக்க முடியாது. காரணம் இவர்கள் தமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரித்து வைத்து அரசியல் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். இவ்விரண்டு சமூகத்தையும் பிரித்து வைத்து தேர்தல்களில் மக்களை உசுப்பேற்றி வாக்குகளை பெற்ற பின் தமது சுயநலனுக்காக இரண்டு கட்சிகளும் இணைந்து கொண்டு மக்களை கைவிட்டுவிடுவதும், பின் கதவால் இரு சமூகங்கள் மத்தியிலும் இனவாதத்தை தூண்டி விடுவதையும் பல வருடங்களாக நாம் கண்டு வருகிறோம்.
ஆகவே கல்முனை புதிய நகர் திட்டத்தை அமுல் படுத்துவதற்கு முன்பாக கல்முனை வயல்வெளியூடாக பாதைகள் வாய்க்கால்கள் முதலில் திருத்தப்படுவதன் மூலம் தமிழ் முஸ்லிம் மக்களின் விவசாய நிலங்களை முதலில் சீர் செய்ய வேண்டும். அதற்கிணங்க கல்முனையின் குடியிருப்பு பகுதியில் உள்ள கிறீன் சிட்டியிலிருந்து சவளக்கடை வரை ஐம்பது அடி விஸ்தீரணமுள்ள பாதை போடப்பட வேண்டும். அதே போல் கல்முனை பஸ் நிலையத்திலிருந்து வயல்வெளியூடாக செல்லும் சிறிய வீதியை அகலமாக்கி அதனை சம்மாந்துறை வரை கொண்டு சென்று ஒரு வழிப்பாதையாக மாற்றுவதன் மூலம் ; சாய்ந்தமருதை குறுக்கறுத்து செல்லும் பிரதான வீதியின் நெரிசலை குறைத்து பொது மக்களை விபத்துக்களிலிருந்து பாதுகாக்க முடியும். இதனை நாம் மறைந்த அமைச்சர் அஷ்ரப் காலத்திலிருந்து கூறி வருகிறோம். ஆனாலும் எதுவும் நடக்கவில்லை. ஆகவே சம்பந்தப்பட்டவர்கள் இது விடயத்தை சாத்தியமாக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்