பேராளர் மாநாடு பறிக்கப்பட்ட பதவியும் கொடுக்கப்பட்ட அதிகாரமும்


எம்.எம்.எம்.நூறுல்ஹக்
சாய்ந்தமருது-05

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேராளர் மாநாடு கடந்த 17.01.2016 இல் குருணாகலில் நடைபெற்றது நாமறிந்ததே.இதற்கு முன்னர் இந்த அளவில் இக்கட்சியின் பேராளர் மாநாடு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறான அவசிய நிலை ஏன் ஏற்பட்டது என்பதற்கு அதன் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் பின்வருமாறு அப்பேராளர் மாநாட்டிலேயே விளக்கமளித்திருக்கின்றார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளராக இருந்த வை.எல்.எஸ் ஹமீட் கட்சியுடன் முரண்பட்டு, கட்சி நடவடிக்கைகளை சீர்குலைத்ததனாலேயே நாம் இன்று குருணாகலில் இந்தப் பேராளர் மாநாட்டைக் கூட்டி புதிய யாப்புக்கு அங்கீகாரம் வழங்குமாறு கேட்கின்றோம்.”
பேராளர் மாநாடுகளை பெருமளவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இதற்கு முன்னர் நடத்திய வரலாற்றைக் கொண்டிராத தமது கட்சியின் தடத்தினை கட்டுடைப்புச் செய்து, பாரிய அளவில் அவர்களின் அழைப்புக்கும் எதிர்பார்ப்புக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதொரு மாநாடாக இது நடந்தேறியிருப்பது இக்கட்சியின் வரலாற்றில் ஓர் புதிய பதிவினை குறித்துக்கொள்கின்றது.
இப்பேராளர் மாநாட்டினூடாக தமது கட்சியின் யாப்பில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அதன் மூலம் சில பதவிகளின் அந்தஸ்த்துக்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.மற்றும் சில புதியவர்களுக்கான பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.அதேநேரம் முன்னைய சிலரின் பதவிகளிலும் மாற்றம் இடம்பெற்றுள்ளது.
பேராளர் மாநாட்டுக்கு வித்திட்ட இக்கட்சியின் முன்னாள் செயலாளர் வை.எல்.எஸ் ஹமீட்டினை கட்சியிலிருந்து முழுமையாக நீக்குதல் அல்லது இடைநிறுத்துதல் போன்ற எந்த கோணத்திலுமான அகற்றுதல் நடந்துவிடாது பிரதித் தலைவர்களுள் ஒருவராக அறிவிக்கப்பட்டிருக்கின்றார்.
கடந்த 2015 ஆகஸ்ட் 17இல் நடைபெற்ற பொதுத்தேர்தலுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்களிடம் முன்னரைவிட சற்றுவேரூன்றத்தொடங்கும் கோணத்தையும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு சவாலாகவும் சமாந்தரமாகவும் முஸ்லிம்கள் நம்பும் பாங்கினையும் நாம் அவதானிக்கும் வகையில் சில வளர்ச்சிகளை நோக்கிய நகர்ச்சியைப் பெற்றிருப்பதும் மிகவும் வெட்டவெளிச்சமானது.
இந்த வகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முன்னரையும் விட இனிவரும் காலங்களில் புத்தெழுச்சியோடும் புதுத்தெம்போடும் கட்சியின் கட்டமைப்பை உறுதியுடனும் பேண வேண்டிய கடப்பாட்டை அடைந்துள்ளது.இதற்கு முகம் கொடுக்கும் வகையில் தமது கட்சி நடவடிக்கைகளை ஸ்திரப்படுத்தும் வேலையை தலைவருக்கு அவசியப்படுத்திவைக்கின்றது.
கட்சியின் செயற்பாடுகள் முடக்கம் பெற்றுக்கிடப்பதை அனுமதிக்க முடியாத சூழ்நிலையை கருத்தில்கொண்டு துரிதமாகவும் செவ்வையாகவும் கட்சியை இயங்குதளத்துக்கு இட்டுச்செல்லும் பொறுப்பு முன்னரை விடவும் இப்போதைக்கு அதிகரித்துவிட்டதென்று கொள்ளமுடியும்.
இதற்கு முன்னாள் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட்டின் மூலம் ஏற்படுத்தப்பட்ட முரண்பாடுகள் கட்சியின் எதிர்கால முன்னெடுப்புக்களை பின்னடையச் செய்வதற்கு வழிசமைக்கக்கூடியதே.அதனைத் தகர்த்தெறியும் அவசியத்தினால் இப்பேராளர் மாநாடு மிகவும் திட்டமிட்டவகையில் நடத்தி முடிக்கப்பட்டிருக்கின்றது.
பேராளர் மாநாடு பற்றிய ஊடக விளம்பரங்கள்,செய்திகள் என்பன விடுமுறை நாட்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.இப்பேராளர் மாநாட்டுக்கு அழைக்கப்பட்டவர்கள் சுமார் 350 பேராகும்.இவர்களுக்கான அழைப்பும் அமைதியான முறையில் அனுப்பிவைக்கப்பட்டுமுள்ளது.இவைகள் பேராளர் மாநாடு நடைபெறுவதை முன்னிறுத்தி ஏதும் நீதிமன்ற தடை உத்தரவுகளைப் பெற்றுவிடக்கூடாது என்கின்ற முன் ஜாக்கிரதை நடவடிக்கை என்றே பார்க்கப்படுகின்றது.
இவ்வாறு பார்ப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் வை.எல்.எஸ் ஹமீட் இப்பேராளர் மாநாடு குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் வெகுஜன ஊடகங்களுக்கு தெரிவித்திருந்த கருத்துத்துக்களில் இதுகுறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டிருப்பதை காணக்கூடியதாகவுள்ளது.இதனை அவரது பாணியிலான பின்வரும் கூற்று உறுதிப்படுத்துகின்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாப்புக்கு முரணாக இன்று குருணாகலிள் நடத்தப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேராளர் மாநாட்டுக்கு எதிராக விரைவில் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உண்மையும் நீதியும் இறைவனின் உதவியினால் நிலைநாட்டப்படும்.”
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேராளர் மாநாடு குறித்து முன்னாள் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட்டினால் நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தைத் தேடி கொண்டுசெல்லப்படும் என்கின்ற பிரகடனத்தை இது துல்லியமாகவும் எமக்கு சுட்டிக்காட்டுகின்றது.
பொதுவான நமது பார்வையில்,தலைவருடன் ஒன்றுபட்டு செயற்படுவதில் சில பின்னடைவுகளை செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட் தொடர்ந்தும் கடைப்பிடித்து வந்தமை பிரத்தியட்சமனாது.இதனால் கட்சியின் முழு மூச்சான வீரியத்துடன் கூடிய செயற்பாடுகளுக்கு இது ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதும் ஒரு நியாயமான எதிர்பார்ப்பாகும்.அதேநேரம் கட்சி சரியாக கட்டமைக்கப்பட்டு தொழிற்பட வேண்டிய ஒரு காலகட்டத்தில் இருப்பதும் மறைவன்று.
கட்சியின் பேராளர் மாநாட்டைக் கூட்டுமாறு கட்சியின் செயலாளர் நாயகத்திடம் நேரிலும் எழுத்திலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டும் அவர் அதற்கான செயற்பாடுகளை தொடக்கிவைக்காதவராக இருந்துவந்திருக்கின்றார்,இந்நிலையில் கட்சியின் பேராளர் மாநாட்டைக் கூட்டி தேவையான முன்னெடுப்புக்களை முன்னகர்த்த அமைச்சரும் தலைவருமான ரிஷாட் பதியுதீன் முனைப்புக் கொண்டது அவரது இடத்திலிருந்து பார்க்கும்போது மிகச்சரியானது என நோக்கப்படலாம்.
கட்சியின் தலைமைத்துவ சபையில் முன்னர் இருந்துவந்த இன்றைய இராஜாங்க அமைச்சர் எம்.எல்..எம் ஹிஸ்புல்லாஹ்,முன்னாள் மாகாண சபை அமைச்சர் எம்.எம்.சுபைர் மற்றும் மௌலவி முபாரக் அப்துல் மஜீது போன்ற சிலர் மாற்றுக்கட்சிகளில் உறுப்புரிமை எடுத்தும் சிலர் விலகி நின்றும் தமது அரசியல் செயற்பாட்டை நிலைநிறுத்தி வருகின்றனர்.இவர்களின் வெற்றிடம் நிரப்பப்படுதல் கட்சியின் நலனில் முக்கியமான பக்கமாகும்.
இதன் நிமித்தம் கட்சியின் பேராளர் மாநாடு கூட்டப்படுவதை தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கு அவசியப்படுத்தியிருக்க முடியும்.இதற்கு முன்னாள் செயலாளர் நாயகம் தொடர்ந்தும் தமது மௌனத்தின் மூலம் தடையாக இருந்துவந்திருப்பதன் காரணமாக கட்சியின் எல்லா வகையான உறுப்பினர்களைக் கொண்டு பதவிநிரல் உறுப்பினர்களை தீர்மாணிக்கும் ஓர் இடமாகவும் யாப்பை திருத்தி நிறைவேற்றிக்கொள்வதற்கு வழிவிடக்கூடியதுமான பேராளர் மாநாடு நடத்தப்படுவதை அவருக்கு இன்னும் அவசியப்படுத்தியும் அவசரப்படுத்தியும் இருக்கின்றது.
பொதுவாக கூட்டங்களைக் கூட்டும் அதிகாரம் செயலாளரிடம் இருப்பது ஒரு பாரம்பரிய நடைமுறை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.ஆயினும் தேவைக்கேற்ப கூட்டங்களைக் கூட்டுமாறு தலைவர் செயலாளரிடம் பணிப்பதன் பேரில்தான் பெரும்பாலும் செயலாளர் கூட்டங்களைக் கூட்டும் நடவடிக்கை நடைபெறுவது என்பதும் ஒரு நீண்டகால மரபைக் கொண்ட செயற்பாடாகும்.
அந்தவகையில் செயலாளரிடம் இருக்கும் கூட்டங்களைக் கூட்டும் அதிகாரத்தை வைத்துக்கொண்டு கட்சியின் நலன்கள் பாதிக்கப்படும் வகையிலும் தேவையான நேரத்தில் முக்கியமான செயற்பாடுகளை முன்னகர்த்த முடியாத நிலையையும் நெருக்கடிகளாக உருவாக்கிவிடும் நிலைக்கு செயலாளர் சென்றுவிடுவதும் ஓர் ஆரோக்கியமான விளைவுக்குரிய பக்கம் அல்ல.
இவ்வாறான ஒரு கட்டத்தில் கட்சியை ஒரு தனிமனிதனுக்காக அல்லது ஒரு பதவியின் அதிகாரத்துக்காக செயற்படாது செயலிழந்து போகும் நிலைக்கு வருவதென்பது அந்த கட்சியில் உறுப்புரிமை கொண்டுள்ள எல்லா வகையான உறுப்பினர்களயும்,தொண்டர்களையும்,ஆதரவாளர்களையும் நசுக்கும் ஒரு முயற்சியாக மாறிவிடும் ஓர் அபாயத்தையும் இது கொண்டிருக்கின்றது.
இத்தகைய சூழ்நிலைகள் தொடர்ந்தும் அனுமதிக்கப்படக் கூடாதென்றால்,கட்சியில் உறுப்புரிமை கொண்டுள்ள  எல்லா வகையான உறுப்பினர்களையும் கட்சியின்நலன்விரும்பிகளையும் ஒன்றிணைக்கும் ஒரு பேராளர் மாநாட்டில் எடுக்கப்படும் தீர்மானங்களினால்தான் இதனை சாத்தியமாக்க முடியும்.இந்த திட்டமிடலின் ஓர் அங்கம்தான் இப்பேராளர் மாநாடு நடத்தப்பட்டு சில மாற்றங்களும்  மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இத்தகைய பலரின் உரிமைகள்,நலன்கள் பாதிக்கப்படும் சந்தர்ப்பத்தில், கூட்டங்களைக் கூட்டும் அதிகாரமுள்ள செயலாளரினால் பேராளர் மாநாடு கூட்டப்படவில்லை என்கின்ற ஒரு காரணத்துக்காக நீதிமன்றம் நடைபெற்ற பேராளர் மாநாட்டை இரத்துச் செய்துவிடுமா? என்கின்ற ஒரு கேள்வியும் இவ்விடத்தில் குறுக்கீடு செய்கின்றது.
அதுமட்டுமன்றி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் முன்னர் பேணப்பட்டுவந்த தலைமைத்துவ சபை என்ற முறைமையில் இருப்புக் கொண்டுள்ள ஏழு பேர்.அவற்றுள் அமைச்சர் ரிஷாட்,பிரதி அமைச்சர் அமீர்அலி முன்னர் விலகிநின்று அண்மையில் சேர்க்கப்பட்டுள்ள சட்டத்தரணி என்.எம்.ஷஹீட்,மௌலவி முபாரக் அப்துல் மஜீத் என்ற நான்கு பேர் ஓர் அணியில் உள்ளனர்.அதேநேரம் இச்சபையில் அங்கத்துவம் வகித்து தற்போது இக்கட்சியைவிட்டும் வெகுதூரம் விலகிச்சென்றுமுள்ள இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,முன்னாள் மாகாண சபை அமைச்சர் சுபைர் ஆகிய இருவர் வேறு பெரிய கட்சியில் சங்கமமாகியுள்ளனர்.ஆகையால் வை.எல்.எஸ் ஹமீட் தலைமைத்துவச் சபை என்ற அடிப்படையில் தனித்தும் பெரும்பான்மையிழந்தும் அவரது அணி என்று அடையாளப்படுத்த யாருமில்லாத ஓரு நிலையும் காணப்படுகின்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இயங்குதலுக்கு தடையாக முன்னாள் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட்தான் காரணம் என தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் முன்னிறுத்தியிருப்பதும் நமது கவனத்துக்குரிய ஒரு விடயமாகும்.எது எவ்வாறிருப்பினும் நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தை நாம் முன்கூட்டி கணித்துவிட முடியாது.ஏனெனில் வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளின் பார்வையும் அந்தச் சூழலில் காணப்பட்ட நியாயங்களும்,சட்டங்களும்தான் தீர்ப்பைத் தீர்மானிக்கும் சக்திகளாக அல்லது சான்றுகளாக அமையும் என்பதும் இதுவிடயத்தில் குறிப்பிடத்தக்கது.
இவற்றுக்கப்பால் இப்பேராளர் மாநாட்டில் அம்பாறை மாவட்டம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசியல் அதிகாரத்தில் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றதா என்கின்ற ஒரு முக்கிய கேள்வியை எழுப்பாதிருக்க முடியாது.ஏனெனில் கடந்த 2015 ஆகஸ்ட் 17இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் சுமார் 33000 வாக்குகளை இம்மாவட்ட மக்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு அளித்திருந்தனர் என்பது ஓர் முக்கிய பார்வைக்குரியதாகும்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸைப் பொறுத்தவரை வடக்கு,கிழக்கு மாகாணங்கள் மிக முக்கியமானவை.ஏனெனில் முஸ்லிம் கட்சிகளின் இருப்பையும் தேவையையும் மிகவும் வலியுறுத்தும் பகுதிகளாகவும் இவ்விரு மாகாணங்களும் அமைந்திருக்கின்றன.அதேநேரம் ஒரு அரசியல் கட்சியின் முக்கிய பதவிகள் எனும்போது தலைவர்,செயலாளர்,தவிசாளர் என்பது குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதாகும்.அதிலும் குறிப்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உருவாக்கம்,அதன் வளர்ச்சி என்பன வை.எல்.எஸ்ஹமீட்டின் செயற்பாடுகளில் அதிகம் தங்கியிருந்தது என்பதும் மக்கள் அறிந்த விடயமாகும்.
அவரின் செயலாளர் பதவியில் மாற்றத்தினை கொண்டுவந்திருக்கும் இத்தகைய ஒரு சூழலில் அப்பதவியை அம்பாறை மாவட்டம் சார்ந்த ஒருவருக்கு வழங்கியிருக்க வேண்டும்.இதற்கு முன்னர் செயலாளர் அம்பாறை மாவட்டம் சார்ந்தவர் என்பது மட்டுமன்றி இக்கட்சியை நம்பி வாக்களித்த மாவட்ட மக்களுக்கு பாராளுமன்ற அரசியல் அதிகாரமென்பது இன்று இல்லாமலும் உள்ளது.கட்சிக்கு வாக்களித்த மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதிக்கத்துக்குள் புதையுண்டு போகும் அல்லது இரையாகிப்போகும் அவலம் இம்மாவட்டத்தில் தொடர்கதையாகிவிடும் நிலைப்பேறும் காணப்படுகின்றது.
இதனால் கட்சியின் அதிகாரப்பலத்தினைக் கொண்டேனும் அக்கட்சியின் நாடாளுமன்ற அரசியல் அதிகாரத்தினையுடையவர்களூடாக சில நிவாரணங்களையேனும் பெற்றுக் கொடுப்பதற்கு வழிசமைப்பதாக அமைந்திருக்க முடியும் என்கின்ற நியாயத்தின் பக்கமிருந்தும் இதனைப் பார்க்க வேண்டியுள்ளது.மற்றும் கட்சியின் பொறுப்புமிக்க பதவிகளில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படவில்லை.பிரதித்தலைவர்கள் என்ற பட்டியலில் கூட சட்டத்தரணி என்.எம்.சஹீட்டினை அடுத்துத் தான் இவர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மக்கள் நலன் சார்ந்த முன்னெடுப்புக்கு அரசியலதிகாரம் கட்சியின் அதிகாரம் என்பன உதவுவது போன்று திணைக்களங்களின் தலைவர் பதவி,இணைப்பாளர் பதவிகள் போன்றவை எதுவும் பெரிதாக மக்களுக்குப் பங்களிப்புச் செய்யப்போவதில்லை என்கின்ற யதார்த்தம் இங்கு சீர்தூக்கிப்பார்க்கப்படல் வேண்டும்.மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட தலைமைத்துவத்தை கிழக்குக்கு வெளியே எடுத்துக்கொண்டதன் காரணமாக செயலாளர் பதவியில் அண்மையில் சில மாற்றங்களை முன்னகர்த்தியிருந்தாலும் அப்பதவி மீண்டும் அம்பாறை மாவட்டத்தை முக்கியபடுத்தி பகிரப்பட்டிருக்கின்றது.அதுவும் அக்கட்சிக்கு அரசியல் அதிகாரம் பெற்றுள்ள நிலையில் என்பதையும் நாம் மறக்கலாகாது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் முன்னர் பிரதி கொள்கைப்பரப்புச் செயலாளர் பதவிப்பொறுப்பில் இருந்த  மௌலவி முபாரக் அப்துல் மஜீத் மீண்டும் இக்கட்சியில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளார் என்ற கதையாடல் சொல்லப்பட்ட போது,அவருக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி வழங்கப்படவுள்ளதாக பரப்புரையை ஊடகங்கள் கசியவிட்டிருந்தன.அவ்வாறான வாக்குறுதி மௌலவி முபாரக் அப்துல் மஜீதுக்கு வழங்கப்பட்டிருந்தால் அது நிறைவேற்றபடாது நிராகரிக்கப்பட்டிருப்பதாகவே இப்பேராளர் மாநாட்டில் முன்வைக்கப்பட்டிருக்கின்ற பதவி விபரங்களிலிருந்து தெரிய வருகின்றது.
இது உண்மையாயின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனினால் வழங்கப்பட்ட வாக்குறுதியை உடனே மீறிவிட்டார் என்பதை இது காட்டும்.இதன்மூலம் தலைமைத்துவம் வாக்குமாறும் செயற்பாட்டாளர் என்ற முத்திரைக்கு உரியவராகின்றார்.இதற்கப்பால் அம்பாறையின் அரசியல் அதிகாரத்தை கட்சிக்குள் இயன்றவரை இரண்டாம் பட்சமாக மாற்றியமைக்கும் பாங்குக்கும் நோக்குக்கும் முன்னிறுத்துகின்ற செயற்பாட்டை தலைவர் ரிஷாட் பதியுதீன் சத்தமின்றி பிரயோகித்துள்ளாரா என்று எம்மைக் கேட்கத் தூண்டுகின்றது.
பொதுவாக இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பலத்தில் அதிக பங்கையும் சக்தியினையும் வலுவூட்டக்கூடிய ஒரு மாவட்டம் அம்பாறைதான்.இதனைப் புறக்கணித்துவிட்டு முஸ்லிம் அரசியல் கட்சிகள் தோன்றுவதற்கும் நிலைப்படுவதற்கும் வாய்ப்புக்கள் அரிதாகும்.இந்த யதார்த்தத்தின் பக்கமும் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் ஆழமாக நோக்கி கவனமெடுக்க வேண்டிய தேவையை உள்ளீர்ந்துகொள்வதும் அவரது எதிர்கால அரசியலில் ஒரு முக்கிய பகுதியாகும்.


M.M.M.NoorulHagu         129B,Osman Road, Sainthamaruthu-05         0772612094

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்