நாங்கள் தமிழ்த் தீவிரவாதத்துக்கோ, பௌத்த தீவிரவாதத்துக்கோ, இஸ்லாமிய தீவிரவாதத்துக்கோ ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.


 
Rishad Bathiudeen
தமது நாட்டில் சிங்கள முஸ்லிம் கலவரத்தை உருவாக்க மேற்கொள்ளும் சதி முயற்சிகளுக்கு இந்த அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாதென்றும், இவ்வாறான பிரச்சினைகளை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டுமென்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று குருநாகலில் இடம்பெற்ற பேராளர் மாநாட்டில் தெரிவித்தார்.
அவர் தனதுரையில் கூறியதாவது,
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாசைகளையும் அவர்களுடைய பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்காக மர்ஹூம் அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சமூகத்திற்கு மாற்றமாக செயற்பட்ட ஒரே ஒரு காரணத்துக்காகவே, அகில இலங்கை மக்கள் காங்கிரசை நாம் உருவாக்கினோம்.
மர்ஹூம் அஷ்ரபின் கண்ணீராலும் வியர்வையினாலும் உருவாக்கப்பட்ட அந்த அமைப்பு அவரின் மறைவின் பின்னர் பிழையான பாதையிலே பயணிக்கத் தொடங்கியுள்ளது. முஸ்லிம் சமூகத்தை ஜனநாயக ரீதியாக ஒன்றுபடுத்தி ஆயுதப் போராட்டத்துக்கோ, பிரிவினைவாதத்துக்கோ, அந்த சமூகத்தின் இளைஞர்கள் பிரவேசித்து விடக்கூடாது என்ற நோக்கத்துக்காக மர்ஹூம் அஷ்ரப் அப்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தார்.
இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் என்றுமே ஆயுதப் போராட்டத்தில்  நாட்டம் கொண்டவர்கள் அல்லர். சிங்கள் இளைஞர்கள் ஆயுதம் தூக்கிய போதும், தமிழ் இளைஞர்கள் இந்த நாட்டை பிளவுபடுத்துவதற்காக ஆயுதம் தூக்கிய போதும் அவர்கள் நடுநிலையாக நின்று சிந்தித்து செயற்பட்டவர்கள்.
எமது மூதாதையர்கள் போல நாமும் நாட்டுப்பற்றுடன் வாழ்ந்தவர்கள். டி.பி.ஜாயா தொடக்கம் அதன் பின் வழி வந்த அத்தனை முஸ்லிம் தலைவர்களும், அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தால் என்ன, சுதந்திரக் கட்சியில் இருந்தால் என்ன, நாட்டுப்பற்றுடன் வாழ்ந்து தமது சமூகத்தையும் வழிநடத்தியவர்கள்.
போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் இந்த நாட்டை ஆக்கிரமித்த போது, சிங்கள தலைவர்களுடன் சேர்ந்து எமது முஸ்லிம் தளபதிகள் இந்த நாட்டை பாதுகாக்கப் போராடியவர்கள். அவ்வாறான ஒரு சமூகத்தை இன்று கேவலப்படுத்த சில பிற்போக்குவாதிகள் முனைந்து வருகின்றனர்.
இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளும், தலிபான்களும் ஊடுருவியுள்ளதாகவும், அதற்கு இலங்கை முஸ்லிம்கள் துணை போகின்றனர் என்றும் வீண் கட்டுக்கதைகளை பரப்பி இங்கு கலவரங்களை உருவாக்க திட்டமிடுகின்றனர். நாங்கள் தமிழ்த் தீவிரவாதத்துக்கோ, பௌத்த தீவிரவாதத்துக்கோ, இஸ்லாமிய தீவிரவாதத்துக்கோ ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. அதனை கடந்த காலங்களில் செயலில்  நிரூபித்துக் காட்டியுள்ளோம்.
இஸ்லாம் எமக்குக் காட்டிய வழியில் நாம் வாழ்க்கை நடத்துபவர்கள். நாம் யாருக்கும் பயந்தவர்களும் அல்லர். இறைவனைத்தவிர எவருக்கும் தலை வணங்குபவர்களும் அல்லர். அகில இலங்கை மக்கள் காங்கிரசை பொறுத்தவரையில், அதன் தலைமை எங்கு பிழை நடக்கின்றதோ அதனைத் தட்டிக் கேட்கும். கடந்த காலங்களில் ஆட்சியாளர்களையும், விடுதலைப் புலிகளையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருப்திப்படுத்திய காரணத்தினாலேயே நமது சமூகம் இவ்வாறான கீழ் நிலைக்குச் சென்றது.
ஆட்சியின் பங்காளியாக இரண்டு ஜனாதிபதிகளை உருவாக்கிய சக்தியைப் பெற்ற நமது முஸ்லிம் சமூகம், பின்னர் முஸ்லிம் காங்கிரசின் போக்கின் காரணாமாக மலினப்படத் தொடங்கியது. ரணில் – பிரபா ஒப்பந்தத்திலிருந்து முஸ்லிம் சமூகத்தை ஒரு குழுவாகவும், வடபுலத்திலிருந்து அடித்து விரட்டப்பட்ட முஸ்லிம்களை இடம்பெயர்ந்தவர்கள் என அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டமைக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைமை தலையசைத்தது.
அகில இலங்கை  மக்கள் காங்கிரசை பொறுத்தத்தவரையில் இந்த நாட்டில் பயங்கரவாதம் தலைத்தூக்கிய போது அதனை ஒழிப்பதற்கு அப்போதைய அரசுடன் ஒத்துழைத்தது. அதன் மூலம் வடக்கிலே வாழ்ந்த முஸ்லிம் சமூகம் மீண்டும் அங்கு திரும்புவதற்கான சூழ்நிலை ஏற்பட்டது.
மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் இறுதிக் காலப் பகுதியில் இந்த நாட்டில் கட்டவிழ்த்துவிடப்பட்ட அராஜஹங்களை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் சமூகத்தின் நன்மைக்காக உயிரையும் துச்சமெனக் கருதாது நாம் அந்த அரசாங்கத்திலிருந்து வெளியேறி மைத்ரிக்கு ஆதரவளித்தோம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை போன்று நாம் தொடை நடுங்கிகளாக, மனசாட்சிப்படி வாக்களியுங்கள் எனக் கூறிவிட்டு, முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டதை அறிந்து மைத்ரிக்கு வாக்களிப்பதாக நாம் அறிக்கை விடவில்லை. எமது கட்சியைப் பொறுத்தவரையில் தேசியப்பட்டியலில் நாம் தீர்க்கமான முடிவை மேற்கொண்டுள்ளோம்.
செயலாளராக இருந்த     வை.எல்.எஸ்.ஹமீட் கட்சியுடன் முரண்பட்டு, கட்சி நடவடிக்கைகளை சீர்குலைத்ததனாலேயே நாம் இந்த செயலாளர் மாநாட்டைக் கூட்டி புதிய யாப்புக்கு அங்கீகாரம் வழங்குமாறு கேட்கின்றோம் என்று அமைச்சர் றிசாத் தெரிவித்தார்.
அமைச்சர் றிசாத் பதியுதீன் தமதுரையின் பின்னர், கட்சியின் புதிய நிர்வாகிகளையும் அறிவித்தார். புதிய செயாலாராக சுபைர்டீன் ஹாஜியார் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், 7 பேர் கொண்ட மஜ்லிஸ் சூரா சபை 25  பேர் கொண்ட அரசியல் அதிகார சபையாக மாற்றப்பட்டுள்ளது.
IMG_9114

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்