வன்புணர்வுச் சம்பவங்களில்; 1,209 சம்பவங்கள் அவர்களின் விருப்பத்துடன்

16 வயதுக்குக் குறைவான சிறுமிகள் மீது 2015ஆம் ஆண்டு புரியப்பட்ட வன்புணர்வுச் சம்பவங்களில்; 1,209 சம்பவங்கள், அவர்களின் விருப்பத்துடன் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு கூறினார்.
பெண்கள் மீதான வன்புணர்வு தொடர்பில் 2014ஆம் ஆண்டு 2,008 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. அதில், 1,911 சம்பவங்கள் தொடர்பிலான சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் தொடரப்பட்டுள்ளன. ஏனைய சம்பவங்கள் தொடர்பில், விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
அத்துடன், 2015ஆம் ஆண்டு நவம்பர் வரை 1,854 வன்புணர்வுச் சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன் அதில் 1,714 சம்பவங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் 80 சதவீதமானவை 16 வயதுக்கு குறைந்தவர்களுக்கு எதிரான சம்பவங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், இதில் 1,501 சம்பவங்கள் 16 வயதுக்கும் குறைந்த சிறுமிகள் மீதான வன்புணர்வு சம்பவங்கள் எனவும் அவற்றில் 1,209 சம்பவங்கள் அவர்களின் விருப்பத்துடனேயே இடம்பெற்றுள்ளன எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
16 வயதுக்கு குறைந்தவர்கள் சிறுவர் என்ற பிரிவில் அடங்குவதால் அவர்கள் விரும்பி பாலியல் உறவில் ஈடுபட்டாலும் அவை சட்டத்தின்படி வன்புணர்வு என்றே கருதப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவங்களில் பெரும்பாலானவை அவர்களின் காதலனால் செய்யப்பட்டவை என்றும் குறித்த வயது பிரிவினர் பாடசாலை மாணவர்கள் என்பதால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கும் போது அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் இதற்கு குறித்த மாணவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்கள், சமூகம் என அனைவரும் பொறுப்புக்கூற வேண்டிய நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, 2015 ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் திகதிவரையான 11 மாதக்காலத்தில் நாடுமுழுவதும் 441 கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதில் 390, கொலைச்சம்பவங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஏனையவை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
புங்குடுதீவு மாணவி கொலை, கொட்டதெனியாவ சிறுமி கொலை போன்ற சம்பவங்களின் பின்னர் பொலிஸார் முன்னெடுத்த நடவடிக்கையின் காரணமாக இவ்வாறான கொலைச் சம்பவங்கள் குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் சுமார் 46 கிலோ 51 கிராம் 280மில்லிகிராம் அளவான ஹெரோய்ன் போதைப்பொருள் மாத்திரம் 2015ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்டுள்ளன. எனினும், 2014 ஆம் ஆண்டு, 312 கிலோகிராம் அளவிலான ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பிரதான போதைபொருள் வர்த்தகர்கள் கைதுசெய்யப்பட்டமை மற்றும் போதைப்பொருள் கடத்தப்படும் வழிகள் தொடர்பில் அறிந்துகொண்டமை காரணமாக போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்