நாமெல்லோரும் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பை நல்லாட்சி வெளிப்படுத்தி இருக்கின்றது.

நமது நாட்டில் வாழும் அனைத்துச்சமூகங்களும் தமது மதம், இனம், மொழி வேறுபாடுகளுக்கு அப்பால், “நாம் இலங்கையர்” என்ற அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் நாமெல்லோரும் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பை இன்றைய நல்லாட்சி அரசாங்கம் வெளிப்படுத்தி இருக்கின்றது.
இது விடயத்தில் நல்லாட்சி அரசாங்கம் அதிகரித்த கவனக்குவிப்பை கொண்டிருக்கின்றது. இதனால்தான் இலங்கையர் என்ற அடையாளத்தை மேலும் உறுதிசெய்வதற்கு பொருத்தமான நிகழ்ச்சித்திட்டத்தினை அமுல்படுத்துவது தொடர்பாக திட்டங்களை தயாரிக்க அமைச்சரவை உப குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களான சரத் அமுனுகம, ரவூப்ஹக்கீம், ராஜித சேனாரத்ன, டி.எம் சுவாமிநாதன், வஜிர அபேவர்தன, மனோ கணேசன், இராஜாங்க அமைச்சர் எ.எச்.எம் பௌசி, பிரதி அமைச்சர் கருனாரத்ன பரணவிதான மற்றும் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் ஆகியோர் இக்குழுவில் இடம்பெறுகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயாகாவின் பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சி காலத்திலும் அதனை அடுத்து வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சி காலத்திலும் “ஒரே நாடு, ஒரே மக்கள்” என்ற கோஷ முன்னெடுப்பு மிகவும் பரபரப்பாக பரப்புரை செய்யப்பட்டு பேசுபொருளாகி இருந்தன.
அதுமட்டுமன்றி மஹிந்தவின் ஆட்சி காலத்தில் இதற்கு ஒருபடி மேல் சென்று சிறுபான்மையினர் என்று நமது நாட்டில் ஒருவருமில்லை. எல்லோரும் நம் நாட்டுமக்களே என்றும் முழங்கப்பட்டன. இவைகள் யாவும் நாம் எல்லோரும் இலங்கையர் என்ற விசுவாசத்தையும் உணர்வையும் கொண்டவர்களாக மாறி வாழவேண்டும் என்பதை வலியுறுத்தும் கோணத்தைக்கொண்ட இயங்கு தளத்துக்கான பொறிமுறையின் கோஷங்களாகவே வெளிப்பட்டன.
இவ்வாறான கோஷங்களின் முன்னெடுப்பின் பின்னால் நல்லெண்ணம் அன்று இருந்ததா? என்று நோக்கினால், இல்லை என்ற பதில் தவிர வேறில்லாத ஒரு வெற்றிடத்தைத்தான் நாம் பார்க்க முடிந்திருக்கின்றது. வெளிப்படையில் முனைப்பாக காட்டிய பக்கத்திற்கு முற்றிலும் நேரெதிரான சிந்தனையும் செயற்பாடுகளும்தான் அதற்குள் புதையுண்டு கிடந்தன.
சிங்கள-பௌத்த பேரினவாத ஆதிக்க மேலாண்மையை நிலை நாட்டுவதற்கு இதனை ஒரு கருவியாக உபயோகித்துக் கொள்ளும் இயங்கியலை முன்னிறுத்திப் பேசப்பட்டவைகளாகவே இதனை பார்க்க முடிகின்றது. ஏனெனில் அவ்வரசாங்கங்களின் முன்னகர்ச்சியில் தமிழ், முஸ்லிம் மக்கள் மீது மாற்றான் தாய் பாங்கினை பிரயோகித்த பல கசப்பான சம்பவங்கள்தான் தொடர்ந்தேர்ச்சியாக நடந்தேறி இருக்கின்றன.
முன்னைய அரசாங்கங்களின் போலித்தனமான முன்வைப்பு போன்றல்லாது உண்மைக்கு உண்மையாக இன்றைய நல்லாட்சி அரசாங்கம் நாம் இலங்கையர் என்ற அடையாளத்தை நோக்கி நெறிப்படுத்த முனைந்தால் அது நமது நாட்டுக்கும் மக்களுக்கும் பேருதவிகளை புரியத்தக்கது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
அந்தவகையில் இது ஆரோக்கியமான சமூகங்களின் நல்லிணக்கத்திற்கும் நாட்டின் அமைதிக்கும் தேசத்தின் முன்னேற்றத்திற்கும் உந்து சக்தியாக அமையவல்லதாகும். இதனை முன்னெடுத்து கட்டமைப்பதற்கு உருவாக்கப்படவேண்டிய பொறிமுறைகள் சரியாக திட்டமிடப்படுவதோடு, அது மிகவும் ஆழமாக மக்களிடையே பதியவைக்கப்படுவதிலும்தான் நாம் இலங்கையர் என்ற அடையாளம் வெற்றிபெறுவது இருப்பு கொண்டிருக்கின்றது.
நாம் இலங்கையர் என்ற அடையாளம் நல்ல எண்ணக்கருவை கொண்டது என்பதினால் முஸ்லிம் மக்கள் உடனடியாக இதன்பால் ஈர்க்கப்படுவதும் ஏற்று போற்றிக்கொள்வதும் நல்வினையாற்றாது. மாறாக இம்மாற்றம் நிகழ்வதற்கு எங்கிருந்து அல்லது எந்தத் தரப்பினர் விட்டுக்கொடுப்புக்களிலும் உளத்தூய்மையையும் வெளிப்படுத்த வேண்டுமோ அங்கிருந்து அவைகள் சரியாக முனைப்புப்பெறுவதை பொருத்துத்தான் இக்கோஷம் வெற்றி நகர்ச்சியை பெறும். இவ்வாறான சூழல் தோன்றினால்தான் நாமும் இதில் இணைந்து செயற்படமுடியும். அதுதான் ஆரோக்கியமான மாற்றத்திற்கும் வழிவகுக்கும்.
பொதுவாக எந்த சமயமானாலும் வன்முறைகளை போதிப்பதில்லை. சமூக நல்லிணக்கத்தை மறுப்பதில்லை. மனித நேயத்தை புறக்கணிக்க சொல்வதில்லை. நீதி, நியாயங்களை அனுசரித்தும் அன்பையும், இரக்கத்தையும் வெளிப்படுத்தியும், பரஸ்பர உறவை பேணவும் வழிகாட்டுகின்றது. ஆயின் அவரவர்களின் மதங்களின் வழியில் முழுமையாக வாழ்ந்தால் எந்த பிரச்சினையும் தோன்றாது என திட்டவட்டமாக நாம் நம்பலாம்.
மதங்களின் அறப்போதனைகளில் ஒன்றித்த போக்குகள் காணப்பட்டாலும் மத வழிப்பாட்டுமுறமைகளில், கோட்பாடுகளில் வேறுபாடுகள் இருக்கவே செய்யும். இதனால் மதங்களுக்கு இடையில் சமரசம் என்பது அறவே சாத்தியமற்ற ஒன்றாகும். இருந்தாலும் மதச்சகிப்பு தத்துவத்தை எந்த மதங்களும் மறுக்கவில்லை. அவரவர் சமயத்தை சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் பின்பற்றுவதை சகித்துக்கொள்ளும் மனோபாவம் நமது நாட்டு மக்களிடையே விதைக்கப்பட்டு பேணப்பட்டாலே நாம் இலங்கையர் என்ற அடையாளம் உணர்வுபூர்வமாகவே வந்துவிடும்.
இன, மத, மொழி வேறுபாடுகள் ஒருபோதும் ஒழிக்கப்பட முடியாத பண்புகளாகும். உலகத்தில் எங்குமே இது மறுக்கப்படாது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் அம்சமாகவும் திகழ்கின்றது. இந்த யதார்த்த நிலையினை மறுதலிக்க படாத வகையில் நாம் இலங்கையர் என்ற அடையாளத்தை நோக்கி பயணிக்க திட்டங்கள் வடிவமைக்கப்படல் வேண்டும். அப்போதுதான் இந்த நோக்கத்தை நாமடைந்து கொள்ளமுடியும்.
பன்மைத்துவ மத, கலாசார, நாகரிக வேறுபாடுகளைக்கொண்ட மக்கள் ஒன்றித்து வாழும் நாடுகள் பல உள்ளன. அப்படித்தான் நமது நாடும். இங்கு நல்லிணக்கம் குலையாத வாழ்வுமுறைமையை விதைப்பது கஷ்டமான காரியம் அல்ல. விட்டுக்கொடுக்க முடிந்தவைகளை விட்டுக்கொடுத்து வாழப்பழகும் போது நாம் இலங்கையர் என்ற அடையாளம் தானாகவே குடிகொண்டுவிடும்.
நமது நாட்டுமக்கள் இன ரீதியாகவும் மத ரீதியாகவும் வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள். இதற்கேற்பதான் நமது குடிசன மதீப்பிட்டு முறைமையும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இவைகளை முற்றாக கட்டுடைப்பு செய்துவிட முடியாது. ஒவ்வொரு சமூகத்திற்கென்றும் சில மத வழிபாடுகளும் ஆடைக்கலாசாரங்களும் சம்பிரதாய வழக்கங்களும் சடங்குகளும் உள்ளன. இந்த வேற்றுமைகளை அங்கீகரித்து ஒற்றுமைப்பட்டு வாழும் நிலைக்கும் நமது மக்கள் திரும்பும்போது நாம் இலங்கையர் என்ற அடையாளக் கூறு மிகவும் பலமாக நம்மத்தியில் காலூன்றிக்கொள்ள முடியும்.
முதலில் நமது நாட்டு அரசியல் அமைப்பு கொண்டிருக்கும் பௌத்த மதத்தை காப்பதும் போஷிப்பதும் அரசின் கடமை என்ற கோட்பாடு மாற்றி எழுதப்படல் வேண்டும். எல்லா மதங்களையும் சமனாக அரசு கையாளும் போக்கினை அறிமுகம் செய்துவைக்க முன்வரவேண்டும். மற்றும் நமது நாடு ஒரு சமூகத்திற்கு மட்டும் பூர்வீகமானது என்ற மனோப்பதிவை அகற்றுவதற்கும் தேவையான முன்னெடுப்புக்களை எடுக்க வேண்டும்.
இவ்வாறான மத சகிப்புத்தன்மை இந்நாடு எல்லோருக்கும் பூர்வீகமானது எங்கின்ற நோக்கினை சரியாக பதிப்பதற்கும் வளர்த்தெடுப்ப்தற்கும் சிறந்த இடமாக நமது பாடசாலைகளை கையாளும் வகையில் நமது திட்டங்கள் முன்னெடுப்பதன் ஊடாக நாம் இலங்கையர் என்ற அடையாளத்தை விரைவாகவும் சரியாகவும் அடைந்து கொள்ள முடியும்.
நமது இன்றைய கல்வித்திட்டமிடலில் சமாதானக் கல்வி என்ரொறு அம்சம் இருக்கிறது. இதனை சற்று விரிவுபடுத்தி, அதாவது நாம் அடைந்து கொள்ள விரும்பும் நாம் இலங்கையர் என்ற அடையாளத்திற்கு தேவையான திட்டங்களை முறையாக பயிற்றுவிக்கும் வகையில் பாடத்திட்டமாக மாற்றி அமைக்கப்பட்டு அதனை ஒரு கட்டாய பாடமாக முன்மொழிதல் வேண்டும்.
பாடசாலை மாணவர்கள் எனும்போது கட்டுக்கோப்புடனும் கட்டமைப்போடும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் காலப்பகுதிகளை உள்ளடக்கிய பருவங்களை கொண்டதாகும். இங்கு கற்கப்படுபவைகள் ஆணித்தரமாக மனதில் பதிந்து கொள்ளவும் நினைவில் நிறுத்தி காரியம் ஆற்றவும் உதவும். இங்கிருந்து நாம் இலங்கையர் என்ற அடையாள விதையை விதைப்பதன் மூலம் எதிர்காலத்தில் நல்ல அறுவடைகளை நாம் அடைந்து கொள்வதை உறுதி செய்துகொள்ளவும் முடியும்.
மனோபாவம் மாற்றத்தின் முதல்படி என்பர். தொழிமுறைமையை மையமாக கொண்ட கல்வியுடன் மத சகிப்புத்தன்மை, நாம் எல்லோரும் இலங்கையர் என்ற உணர்வு என்பனவற்றை படிப்படியாக விதைக்கும் வகையில் படிமுறையாக புகப்பட்டுவதன் ஊடாக மாற்றி அமைக்க முடியும். சில மத வைபவங்களை எல்லோருக்கும் பொதுவான ஒரு மதத்தின் விழாவினை கைக்கொள்வதன் மூலம் நல்லிணக்கம் உடன் மலர்ந்துவிடுமென்று எதிர்பார்க்க முடியாது.
அதேபோன்று ஒன்றித்த சூழலில் பல சமயத்தவர்கள் வாழ்வதன் ஊடாகவும் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு வாழும் மனோநிலை வளரக்கூடியதாக இருந்தாலும் அது பரீட்சாத்தமாக நமது நாட்டிலும் நமது மக்களிடமும் தோல்வி கண்டிருக்கின்றது. இதனால் புதிய பரீட்சாத்த முறமைகள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டிய ஒரு தருணத்தை நமக்கு ஞாபகப்படுத்தி வைக்கின்றது.
இதனால் மதங்களிடையே எவற்றில் விட்டுக்கொடுப்பு நிகழமுடியாது. ஏன் அவ்வாறு பேணவேண்டி இருக்கின்றது என்பதை ஒவ்வொரு சமயத்தவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் கற்ப்பிக்கப்படவேண்டும். எப்படி மத சகிப்புத்தன்மையை அனுஷ்டிக்க வேண்டும் என்பதையும் தெளிவாக சுட்டிக்காட்டும் வகையில் பாடம் புகட்டப்பட வேண்டும்.
இங்கு வாழும் அனைத்து சமூக மக்களுக்கும் இந்நாடு பூர்வீகமானது என்பதை வலியுறுத்தும் வகையில் நமது வரலாறு பாடஅலகு திருத்தப்படல் வேண்டும். அல்லது மத சகிப்புத்தன்மையை புகட்டும் புதிய பாடம் ஒன்றுக்குள் இதனையும் சரியாக உள்வாங்கி கற்பிக்கப்படுவதினால் மனோபாவம் மாறும் சந்தர்பத்தை எட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கின்றது.
மதம், இனம், மொழி, நிற வேறுபாடெல்லாம் இயற்கையானது. அவைகள் பேதங்களை உருவாக்கும் கட்டமைப்புக்குள் உள்வாங்கப்படும் போதுதான் வேண்டத்தகாத விளைவுகளையும் முரண்பாடுகளையும் பகமையையும் நிரந்தரப்படுத்தி விடுகின்றது. அவ்வாறில்லாது இந்த இயற்கையான இயல்பை நாம் ஏற்றுத்தான் நமக்குள் ஒற்றுமை காணப்பட வேண்டும் என்பது அறிவுபூர்வமாகவும் சினேகபூர்வமாகவும் உணர்த்தப்படும் போதுதான் நாம் இலங்கையர் என்ற அடையாளத்தை எய்த முடியும்.
மாறாக தோல்வி கண்ட வழிமுறைகளில் இன்னும் தரித்து நின்று கொண்டு மாற்றத்தை அடைவதற்கு வழி தேடுவது ஒருபோதும் முன்னேற்றத்தை தராது.அதே போன்று மாற்றம் நிகழவேண்டிய இரு பக்கங்கள் இருக்கும் போது ஒரு பக்கம் மட்டும் மாறுவதினாலும் உரிய இலக்கை நோக்கி பயணிக்க முடியாத முடக்கத்தையே நாம் அடைய வேண்டி இருக்கும்.
மாணவப்பருவத்தில் புகட்ட எடுக்கப்படும் அதே முயற்சி அளவில் அரசாங்க மட்டத்தில் காணப்படவேண்டிய மாற்றங்களுக்கு இடையிலான பாகுபாட்டு குறியீட்டை அகற்றி மாணவர்களிடையே போதிக்க எடுக்கும் வடிவத்திற்கு ஏற்ப அரசாங்கமும் சில திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வகையில் சில தீர்வுகளை முன்மொழிந்து மத, இன, மொழி நல்லிணக்கத்தை சரியாக கடைப்பிடிக்கும் நிர்வாக கட்டமைப்புகளை உருவாக்குதலும் வேண்டும்.
இவ்வாறான முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதில் சில அதிகாரிகள் முட்டுக்கட்டை வகிக்கலாம். அவ்வாறான சந்தர்பங்களில் அவர்களுக்கு தேவையான மனவெழுச்சி வழிகாட்டலுடன் கூடிய தண்டனை பயிற்சிகளை வழங்கி அவர்களின் மனோஇயல்பை மாற்றுவதற்கும் ஏதுவான திட்டங்கள் நம் மத்தியில் இருக்க வேண்டும்.
இங்கு குறிப்பிடப்படாத வேறு வழிகளில் கூட நாம் இலங்கையர் என்ற அடையாளத்தை அடையக்கூடியதாக இருப்பின் அவ்வழிமுறையின் தேடல்களும் உள்வாங்கப்படல் வேண்டும். இக்கட்டுரை மதம், இன, மொழி வேறுபாடுகள் இருக்கத்தக்க நிலையில் வேற்றுமைக்கு மத்தியில் ஒற்றுமை என்ற இலக்கினை மையப்படுத்தியதாகும். இந்த வழிமுறமையும் உலக அரங்கில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நெறியாகவும் உள்ளது.
இதனாலும் பன்மைத்துவ மத, இன, மொழி, கலாசாரங்களையுடைய மக்களை கொண்ட நமது நாடு என்பதையும் கவனத்தில் எடுத்து எனது சில பதிவுகளை இங்கு பதிவாக்கி வைக்கின்றேன். அதற்காக இதுவே முடிந்த முடிவு என்பது எனது முன்வைப்பு அல்ல. இருந்தாலும் எனது நோக்கை மீண்டும் ஒரு தடவை பின்வருமாறு வலியுறுத்த விரும்புகின்றேன்.
அவரவர் மதங்களின் வழியில் முழுமையாகவும் சுதந்திரமாகவும் பகிரங்கமாகவும் ஈடுபடுவதை நாம் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் மனோ நிலைதான் நாம் இலங்கையர் என்ற அடையாளத்தை உறுதிப்படுத்தி வலிமைபெறச் செய்ய ஏதுவானதாகும்.
எம்.எம்.எம் நூறுல்ஹக்
சாய்ந்தமருது – 05

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்