கடும் போக்கு அமைப்புக்களை நல்லாட்சி அரசும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?

பொதுபலசேனா மற்றும் ராவனா பலய ஆகியவற்றின் அண்மைக்கால செயற்பாடுகள் தமிழ்-முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கட்டுப்படுத்த முடியாத  இவர்களின் செயற்பாடுகளை இந்த நல்லாட்சி அரசினால் கூட கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாதுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்து அதிகாரம் அளிகக்ப்பட்ட பொலீஸ் காரர்கள் என்று சொல்லப்பட்டு வந்த பொதுபலசேன முஸ்லிம்களின் மத உரிமைகள் உள்ளிட்ட செயற்பாடுகளில் மூக்கை நுழைத்து முஸ்லிம்களுக்கு எதிராக வெளிப்படையாகவே செயற்பட்டு வந்தனர்.
இது முஸ்லிம்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது. பொதுபலசேனாவின் அட்டகாசத்தை மஹிந்த அரசு கட்டுப்படுத்தத் தவறியமை முஸ்லிம்கள் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படத்தியதுடன், ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு அளித்ததும் அந்த கோபத்தின் ஒரு வெளிப்பாடாகும். இதனை முன்னாள் ஜனாதிபதியும் நன்கு புரிந்துகொண்டிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
மஹிந்த அரசில் சிறுபான்மையினருக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை தாம் பெற்றுத் தருவதாகவும், நாட்டில் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் நல்லாட்சி அரசு உருவாக்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்திய மைத்திரி-ரணில் தலமையிலான நல்லாட்சி மீது நம்பிக்கை வைத்து தமிழ்-முஸ்லிம் மக்கள் நல்லாட்சிக்கு ஆதரவாக வாக்களித்தார்கள்.
தனது முழுமையான தோல்விக்கு சிறுபான்மை மக்களே காரணம் என ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டை மெதமுலனயில் உள்ள தனது வீட்டில் வைத்து ஆதரவாலர்கள் மத்தியில் குறிப்பிட்டிருக்கிறார்.
அத்துடன், தமிழ்- முஸ்லிம் மக்களின் தலைவர்கள் எதை வந்து கேட்டாலும் அதனை இல்லை என்று மறுக்காமல் அபிவிருத்தி, தொழில்வாய்ப்பு உள்ளிட்ட அனைத்தையும் செய்துகொடுத்திருக்கிறேன். ஆனால் தமிழ்-முஸ்லிம் அரசியல் தலைவர்களும், மக்களும் தனக்கு துரோகம் இழைத்துவிட்டனர் எனவும் தனக்கு நெருக்கமானவர்களிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கிறாராம்.
உண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருந்தாலும். அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களை முன்னெடுத்திருந்தாலும் முஸ்லிம்களுக்கு எதிரான பகிரங்கமாக செயற்பட்ட பொதுலசேனா அமைப்பை கட்டுப்படத்தத் தவறியமை ஒரு குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டிருந்தது.
அத்துடன், அபிவிருத்தி விடயங்களில் கவனம் செலுத்தி மஹிந்த அரசாங்கம் தமிழ் மக்களின் கோரிக்கைகளை கணக்கெடுக்காமையும் தமிழ் மக்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த இரண்டு காரணங்களினாலேயே தமிழ்-முஸ்லிம் மக்கள் மஹிந்த அரசை ஆட்டங்காண வைப்பதற்கு, நல்லாட்சி அரசு உருவாக ஆதரவாக வாக்களித்தனர்.
எனவே, என்ன நோக்கத்திற்காக நாட்டில் நல்லாட்சி மலர வேண்டும் என்று நம்பி சிறுபான்மை மக்கள் வாக்களித்தார்களோ அந்த நோக்கங்கள் தற்போதைய நல்லாட்சி அரசினால் நிறைவேற்றிக்கொடுக்கப்பட்டுள்ளனவா என்பது சந்தேகத்துக்குரியதாகும்.
ஏனேனின், தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த நல்லாட்சி அரசு மீது நம்பிக்கையிழந்து இருப்பதை அவர்கள் விடும் அறிக்கையில் இருந்து மிகத் தெளிவாகப்புரிந்து கொள்ள முடிகிறது.
தாங்கள் எதிர்பார்த்ததை, எமக்கு அளித்த வாக்குறுதிகளை நல்லாட்சி அரசு மீறியிருக்கிறது என தமிழ் தேசியக்கூட்டமைப்பு தற்போது குற்றம் சுமத்தி வருகிறது.
இதற்கிடையில் மஹிந்த அரசில் முஸ்லிம் மக்களுக்கு பொதுபலசேனா பெரம் தலையிடியைக் கொடுத்ததைப் போல நல்லாட்சி அரசாங்கத்தில் ராவனா பலய எனும் கடும்போக்கு அமைப்பு தமிழ் மக்களுக்கு ஒரு சவாலாக அமைந்துள்ளது.
மிக நீண்ட காலமாக எந்தவிதமான விசாரணைகளுமின்றி நான்கு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நல்லாட்சி அரசு விடுதலை செய்ய வேண்டும் என்பதை தமிழ் தேசியக்கூட்டமைப்பு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை கட்டம் கட்டமாக விடுதலை செய்வதற்கு அரசு தீவிர ஆலோசனை செய்து வரும் நிலையில் ராவனா பலய அமைப்பு அரசின் இந்த செயற்பாடு குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தால் நாட்டில் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் எனவும், அவர்களை விடுதலை செய்ய வேண்டாம் என்றும் பகிரங்கமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தால் இலங்கையில் மீண்டும் புலிப்பயங்கரவாதம் தலைதூக்கிவிடும் எனவும் இதற்கு ஜனாதிபதி உரிய பதிலை அளிக்காவிட்டால் நாம் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிடப் போவதாக ராவனா பலய அமைப்பின் பொதுச் செயலாளர் சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இம்மாதம் 27ஆம் திகதி வருகை தருமாறு ராவனா பலய அமைப்பினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எனினும் ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயத்தினால் குறித்த சந்திப்பு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் ராவனா பலய அமைப்பு ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்று இவ்விடயம் தொடர்பில் தமது நிலைப்பாடுகளை ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்து பேச்சுசுவார்ததை நடத்தியுள்ளதாக இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது அதிகாரமளிக்கப்பட்ட பொலீஸ்காரர்கள் என்று சொல்லப்பட்டுவந்த பொதுபல சேனா அமைப்பினர் நீதித்துறைக்கும், அரசாங்கத்திற்கும் சவால் விடுக்கும் வகையில் தமது அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.
ஆல்குர்ஆன் அவமதிப்பு உள்ளிட்ட பல வழக்குகள் காணப்படுகின்ற பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் அண்மையில் ஊடக மாநாடொன்றை நடத்தி அதில் அரசுக்க சவால் விடும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இது இணையத்தளங்கள், சமூக வளைத்தளங்கள் என்பவற்றின் ஊடாக வெளியாகியிருந்தது.
பொதுபல சேனா அமைப்பு அரசுக்கு சவால் விடுக்கின்றமை இதுவொன்றும் புதிய விடயமல்ல. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கும், அரச நிறுவனங்களுக்கும் சென்று சவால் விடுகின்ற அல்லது எச்சரிகை விடுக்கின்ற பணியை அவர்கள் செய்து வந்தார்கள். ஆனால் அப்போதைய அரசு அவர்களின் செயற்பாடுகளை எல்லை மீறும் அடாவடித்தனத்தை கட்டுப்படுத்தத் தவறியிருந்தது.
எனவே, அன்று எப்படிச் செயற்பட்டார்களோ அதுபோல கொஞ்சம் கூட குறையாமல் அதே பாணியில் மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளனர். இவர்களுக்கு ராவனா பலயவும் பக்கவாத்தியம் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.
இலங்கையில் வாழும் தமிழ்-முஸ்லி;களின் விடயங்களை கையாளுவதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் இருக்கிறது. இப்படியிருக்கையில் இனவாத அமைப்புக்கள் ஏன் மூக்கை நுழைக்கிறார்கள் என்பதுதான் மக்களின் ஆதங்கமாக இருக்கிறது.
சட்டம் எல்லோருக்கும் சமமானது. அது தனது கடமையை சட்டப்படியே செய்யும் என்ற நம்பிக்கையில் அதுபற்றி நாம் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.
எனினும் பொதுபல சேனா மற்றும் ராவனா பலய ஆகிய இவ்விரண்டு கடும்போக்குடைய அமைப்பினரின் கடும் போக்கு செயற்பாடுகளுக்கு  நல்லாட்சி அரசு எப்படி மருந்து கட்டப் போகிறது என்பதுதான் எல்லோரினதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
நல்லாட்சி உருவாக்க ஒத்துழைப்பு வழங்கிய தமிழ் தரப்பினர் இன்று நல்லாட்சி அரசு மீது அதிருப்த்தியடைந்திருக்கிறார்கள். நாட்டில் ஏற்பட்டிருப்பது நல்லாட்சியில்லை. மஹிந்தவின் ஆட்சியைப் போலவே இந்த ஆட்சியும் செயற்படுகிறது எனவும் விரைவில் அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை விலக்கிக் கொள்ளப் போவதாகவும் தமிழ் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பைப் போல நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆசையுடன், எதிர்பார்ப்புக்களுடன் வந்தவர்கள் பலர் இன்று மஹிந்த ஆட்சியெ மேல் என்று சொல்லுகின்ற அளவுக்கு நல்லாட்சி அரசோடு கோபித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அத்துடன், நல்லாட்சி நடைபெறும் இந்த நாட்டில் இனவாத அமைப்புகள் தலைதூக்கி பகிரங்கமாக செயற்படுவது நாட்டிற்கும், நல்லாட்சிக்கும்  நல்லாரோக்கியத்தை ஏற்படுத்தாது என்பதை ஜனாதிபதி மற்றும் பிரதம் தலமையிலான அரசு புரிந்துகொள்ள வேணடும்.
நல்லாட்சி மீதான அதிருப்;த்தியாளர்கள் ஒருபுறம், இவ்வாறான இனவாத அமைப்புக்களினால் ஏற்படும் தலையிடி மறுபுறம். எனவே இந்த இரண்டு விடயங்களையும் நல்லாட்சி அரசு எப்படி சமாளிக்கப் போகிறது என்பதுதான் எதிர்பார்ப்பாகும்.
வெறும் வார்த்தைகளினால் மாத்திரம் நல்ல ஆட்சி என உச்சரிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது.

ரஸீன் ரஸ்மின்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்