மலையக ஆசிரியர் நியமன புறக்கணிப்பு. முஸ்லிம் கட்சிகளும், ம. முஸ்லிம் கவுன்சிலுமே பொறுப்பேற்க வேண்டும்.

மலையக ஆசிரியர் நியமனங்களில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுவதற்கு பாராமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகள் விட்ட மிகப்பெரிய தவறேயாகும் என உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
கட்சித்தலைமையகத்தில் நடை பெற்ற மௌலவி ஆசிரியர் நியமனம் சம்பந்தமாக ஆராயும் கூட்டத்திலேயே இவவாறு அவர் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிட்டதாவது,

2005ம் ஆண்டு வழங்கப்பட்ட மலையக ஆசிரியர் நியமனத்தின் போது இந்து மற்றும் கத்தோலிக்க பாடங்களில் சித்தியடைந்தோருக்கு மட்டுமே நியமனம் வழங்கப்படும் என வர்த்தமாணி அறிவித்தல் வெளியான போது அதனை பகிரங்கமாக கண்டித்தது உலமா கட்சி மட்டுமே. அதன் போது தற்போதைய அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களின் முயற்சி காரணமாக இது விடயம் உயர் நீதிமன்றுக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் 600 ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. இந்நியமன வழங்கலின் போது அமைச்சர் பைசர் முஸ்தபா, அமைச்சர் ஏ எச் எம் பௌசி, உலமா கட்சித்தலைவர் ஆகியோரே கலந்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

அதன் பின் மலையக முஸ்லிம் கவுன்சில் தங்களது சுய அரசியல் இலாபம் காரணமாக சில முஸ்லிம் கட்சி அமைச்சர்களை மட்டும் நம்பி அவர்களுக்கு தேர்தல் வேலை செய்ததன் மூலமாக மலையகத்தில் காணப்படும் முஸ்லிம் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்ப முயற்சித்தது. இந்த வகையில் கடந்த ஊவா மாகாண சபை தேர்தலின் கூட்டாக போட்டியிட்ட முஸ்லிம் கட்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியபோது இது விடயத்தில் தாம் கவனமெடுப்பதாக அமைச்சர்கள் கூறிய வார்த்தையை மலையக முஸ்லிம்கள் நம்பி அவர்களுக்கு வாக்களித்தனர். மஹிந்த அரசை மாற்ற விடக்கூடாது என்பதற்காகவே இந்த முஸ்லிம் கட்சிகளின் கூட்டு உள்ளது என்பதை அன்று உலமா கட்சி மட்டுமே பகிரங்கமாக சுட்டிக்காட்டியது. கடைசியில் இந்த அமைச்சர்களை நம்பி ஐ தே கவை தோற்கடிப்பதற்கு மலையக முஸ்லிம்கள் துணை போயினர்.

அதன் பின் 2015 ஜனாதிபதித்தேர்தல் வந்தது. அதன் போது முழு முஸ்லிம் சமூகத்துக்கும் ஒரு விடயத்தை கூறினோம். யாருக்கு வாக்களிப்பதாக இருந்தாலும் ஒரு அமைப்பாக ஒன்று பட்டு ஜனாதிபதி வேட்பாளர்களுடன் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் பற்றி ஒப்பந்தமிட்டு ஆதரவளியுங்கள் என்று. ஆனால் முஸ்லிம் சமூகமும், முஸ்லிம் கட்சிகளும் எமது ஆலோசனைகளை கேட்காமல் கும்பலோடு கும்பலாக அள்ளுப்பட்டது. அதே வேளை உலமா கட்சியும் ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவரிடமும் நிபந்தனைகளை முன் வைத்தது. ஆனால் அக்கட்சிக்கு வாக்குப்பலம் இல்லாத காரணத்தால் ஒப்பந்தத்துக்கு வர மறுத்து விட்டனர். வாக்குப்பலம் உள்ள முஸ்லிம் கட்சிகளோ தமக்குரிய சொந்த பதவிகள் பற்றிப்பேசினரே தவிர முஸ்லிம் சமூகத்தின் எந்தவொரு உரிமை, தேவை பற்றியும் ஒப்பந்தம் செய்யவில்லை.

2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது மௌலவி ஆசிரியர் நியமனம், கதீப் முஅத்தின்களுக்கு அரச சம்பளம், பயங்கரவாதத்தை தோற்கடித்தல் ஆகிய நிபந்தனைகளை முன் வைத்து உலமா கட்சி ஆதரவளித்தது. இவற்றில் இரண்டு விடயங்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிறைவேற்றித்தந்தார். எமக்கென எந்தவொரு பதவியையும் நிபந்தனையாக்காமல் சமூகத்தின் தேவையை மட்டும் வைத்து எவ்வாறு தேர்தல் கால ஒப்பந்தம் செய்வது என்பதை முஸ்லிம் கட்சிகளுக்கு ஒரு வழிகாட்டலாக உலமா கட்சி செய்து அதில் வெற்றியும் கண்டது. மஹிந்தவின் பத்து வருட ஆட்சியில் எந்தவொரு அரசியல் பதவியையும் உலமா கட்சி பெறாமல் சமூக உரிமைக்காக தியாகத்துடன் பணித்தது.

 எமது இந்த வழிகாட்டலை கடந்த ஜனாதிபதி தேர்தலிலும், பொது தேர்தலிலும் வாக்கு வங்கியுள்ள முஸ்லிம் கட்சிகள் மேற்கொண்டிருந்தால் இன்று ஒப்பாரி வைத்துக்கொண்டு அலைய வேண்டிய நிலை வந்திருக்காது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒன்பது மாதங்களாகியும் மலையக முஸ்லிம் மக்களுக்கு ஆசிரிய நியமனம் மறுக்கப்படுகிறது என்றால் அதற்கான முழு பொறுப்பையும் முஸ்லிம் கட்சித்தலைவர்களும், சுய நல அரசியல்வாதிகளுடன் உறவு கொண்டாடும் மலையக முஸ்லிம் கவுன்சிலுமே பொறுப்பேற்க வேண்டும் என நாம் தெரிவிப்பதுடன் மௌலவி ஆசரியர் நியமனம், மலையக முஸ்லிம் ஆசிரியர் நியமனங்களை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கறோம் என முபாறக் மௌலவி தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்