கிராமம், நகரம், வடக்கு, கிழக்கு, மலையகம் என்ற பேதங்களின்றி நாட்டில் அனைத்து மக்களுக்கும் சமமான சேவையையும் வரப்பிரசாதங்களையும் பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் கொள்கையாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
இன, மத, பிரதேச பேதமின்றி அனைத்து மக்களுக்கும் அவர்களுக்கான தேவைகளையும் உரிமைகளையும் அரசாங்கம் பெற்றுக் கொடுத்து வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி தொடர்ந்தும் கொள்கையாக அதனை முன்னெடுக்கும் எனவும் சுட்டிக்காட்டினார்.

மலையகப் பெருந்தோட்டத் துறையில் 400 தபால் சேவகர்கள் புதிய நியமனங்களை வழங்கி மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர்; மலையக மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு ‘லயன் காம்பிரா’ யுகத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கும் காலம் வெகு தூரத்திலில்லை எனவும் தெரிவித்தார். இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி;
பெருந்தோட்டத்துறை தபால் சேவகர் நியமனம் பெற்றுள்ள அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். பெருந்தோட்டத்துறை தபால் சேவகர் பிரச் சினை தொடர்ந்து நிலவிய ஒன்றாகும். நீண்ட நாள் கன வொன்று நனவாகி யுள்ளதில் நீங்கள் மகிழ்ச்சியடைவது போன்றே நானும் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
நெடுங்காலமாக சமயா சமய அடிப்படையில் சேவை செய்து வரும் உங்களது சேவையை கெளரவித்து நாம் உங்கள் நியமனத்தை நிரந்தரமாக் குகின்றோம்.
மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு மஹிந்த சிந்தனை மூலம் வழங்கப்பட்ட வாக்குறுதியை நாம் இதன் மூலம் நிறைவேற்றியுள்ளோம்.
இதுபோன்றே அரச துறையின் வெவ்வேறு பிரிவுகளிலும் சமயா சமய அடிப்படையில் கடமையாற்றிய பெருமளவிலானோரை நாம் நிரந்தரமாக்கியுள்ளோம். அதேபோன்று தபால் துறையிலும் நாம் அதனை நிறைவேற்றியுள்ளோம்.
இதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வரவு செலவு திட்டத்தில் அதற்கான நிதியினை ஒதுக்கி அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் இதனை செயற்படுத்தியுள்ளோம்.
ஒருவகையில் இந்த கால கட்டமே தபால் சேவையின் பொற்காலம் என்றால் அது மிகையாகாது, தபால் துறை 210 வது ஆண்டு நிறைவை நினைவு கூரும் ஆண்டு இது. இதற்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது.
ஒவ்வொரு கால கட்டத்திலும் பல அரசாங்கங்களின் கீழ் இந்த தபால் சேவை செயற்பட்டது. தபால் என்றதுமே எமக்கு நினைவுக்கு வருவது புளுதி படிந்த பழைய தபால் கந்தோர் கட்டிடங்களே. இப்போது இந்த நிலை மாற்றம் பெற்றுள்ளது. அழகான நவீன தபால் கந்தோர்கள் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
ஒரு வகையில் இது தனியார் நிறுவனங்களை போன்று ஒரு வர்த்தகமாகி உள்ளது. வர்த்தக மாதிரிகையாக மாற்றம் பெற்றுள்ளது. இதனால் தபால் துறையின் வருமானம் தற்போது அதிகரித்து வருகிறது.
கடந்த வருடம் 600 மில்லியன் தபால் துறைக்காக அரசாங்கத்திடமிருந்து கோரப்பட்டது எனினும் இம்முறை அது குறைந்து அடுத்த முறை இதனை மேலும் 100 மில்லியனால் குறைக்க முடியும் என எண்ணுகிறேன். இந்த வகையில் இதன் வருமானம் 100ற்கு 25 வீதத்தால் அதிகரித்துள்ளது. நாம் தபால் துறைக்கு நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியதன் பிரதிபலனே இது.
மக்கள் நலனுக்காக தபால் துறையில் நடவடிக்கைகளை இலகுபடுத்தியுள்ளோம். இதற்கிணங்க தபால் துறை ஊழியர்களும் தம்மை மாற்றிக் கொள்வது அவசியமாகும்.
தற்போது நாடு முழுவதிலும் 7000 தபால் சேவகர்கள் கடமை புரிகின்றனர். தபால் சேவகர்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையுள்ளது. அவர்கள் மக்களை நெருங்கி சேவை செய்வதால் மக்களின் அபிலாசைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை இனங்கண்டு கொள்ள முடியும். அவர்களுக்கான மின் கட்டண பட்டியல், நீர் கட்டண பட்டியல்களை விநியோகிப்பதும் நீங்களே. இது மிக பெறுமதிமிக்கதொரு சேவை.
தபால் சேவைக்கு இதன் மூலம் உயர் கெளரவத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். நான் அறிந்த வகையில் கிராமப் பிரதேசங்களில் தபால் சேவகருக்கு மிகுந்த மதிப்பு உள்ளது. திருமணங்கள் போன்ற நிகழ்வுகளில் அவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதுடன் அங்கு சில வேளை அவர்களே உரையாற்றுவதையும் காணமுடியும்.
கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னரும் முப்பது வருட யுத்த சூழ்நிலையிலும் தபால் சேவை செயற்பட்டது. அனைத்துத் தடைகளுக்கு மத்தியிலும் நீங்கள் உங்கள் கடமைகளை சரிவர நிறைவேற்றியுள்Zர்கள்.
எனினும் மலையக தோட்டப்புற மக்களுக்கான தபால் சேவை மிக மோசமாகவே இருந்தது. அவர்கள் அதனால் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்க நேர்ந்தது. அந்த மக்களுக்கான தபால்களும் பார்சல்களும் தோட்ட ‘சுப்ரிண்டன்ட்’ கைகளிலேயே கிடைக்கும் அவர் விரும்பினால் மட்டுமே அதனை உரியவர்களுக்கு கையளிப்பார். இந்த நிலைமையே தொடர்ந்தது.
இதனால் அந்த மக்களின் நலன் கருதியே நாம் தோட்டத்துறைக்கான தபால் சேவகர்களை நியமித்துள்ளோம். இனிநேரடியாக அவர்கள் உங்கள் கைகளிலிருந்து கடிதங்களையும் பார்சல்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.
கிராமம், நகரம், மலையகம், வடக்கு, தெற்கு, கிழக்கு என நாம் எந்த வித்தியாசமும் பார்ப்பதில்லை. சகல மக்களையும் சமமாக மதித்து சேவை வழங்கக் கூடிய நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம். கல்வியாகட்டும். சுகாதாரமாகட்டும் ஏனைய அனைத்துத் துறையிலும் கிட்டும் வரப் பிரசாதம் சகல மக்களுக்கும் கிடைக்க வேண்டும். இதுவே அரசாங்கத் தின் கொள்கையாகும்.
இதற்கிணங்க 100/99 வீதமானவர்களுக்கு இப்போது மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு மக்கள் மட்டுமே அனுபவித்த வரப்பிரசாதங்கள் தற்போது முழு நாட்டுக்கும் வழங்கப்பட்டுள்ளன. அனைத்தும் மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ளது.
மலையகத் தோட்டப்புறங்களில் பிரச்சினைகள் உள்ளன என்பதை நாம் அறிவோம். குறைபாடுகள் நிலவுகின்றன. ‘லயன் காம்பிரா’ யுகம் தொடர்கிறது. எனினும் ‘லயன் காம்பிரா’ யுகத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கும் காலம் வெகு தூரத்திலில்லை என்பதை குறிப்பிட விரும்புகின்றேன்.
அனைத்து நலன்கள் வசதிகளையும் தோட்ட மக்களும் பெற்று அனுபவிக்க வேண்டும். நாம் தோட்டப்புறம் என்று அதனை ஒதுக்குவதில்லை. அரச நியமனங்கள் வழங்கப்படும் போது கிராம சேவகர், பொலிஸ், சுகாதாரத்துறை நியமனங்களின் போதும் நாம் சமமான நியமனங்களை வழங்குகிறோம்.
அங்கு பல்கலைக்கழகத்துக்கு செல்வோர் அதிகரித்துள்ளனர். ஆங்கிலக் கல்வி கற்போர் தொகையும் அதிகரித்துள்ளது. இது எமக்குக் கிடைத்த வெற்றியாகும். இதுவே எமது எதிர்பார்ப்புமாகும். இதனைத் தொடர்ந்து நாம் முன்னெடுப் போம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்கள் ஜீவன் குமாரதுங்க, ஆறுமுகம் தொண்டமான், சி.பி. ரத்நாயக்க, இ.தொ.கா. தலைவர் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், தபால் மா அதிபர் ரொஹன அபே ரத்ன உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.