( மினுவாங்கொடை நிருபர் )
உலகின் மிகப் பெரிய எயார் பஸ் விமானமொன்று, எதிர்வரும் 14 ஆம் திகதி
திங்கட்கிழமை மாலை சரியாக 4.10 மணிக்கு, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச
விமான நிலையத்தை வந்தடையவுள்ளது.
கட்டுநாயக்க
விமான நிலையத்தின் 45 மீற்றர் அகலமான பழைய ஓடு பாதை, 75 மீற்றராக புதிதாக
அகலமாக்கப்பட்டு, அண்மையில் திறக்கப்பட்ட பின்பு, பாரிய எயார் பஸ்
விமானம் ஒன்று, கட்டுநாயக்கவில் தரை இறங்குவது, இதுவே முதற்தடவையாகும் என,
போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்க
தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கட்டுநாயக்க விமான
நிலையத்தின் ஓடு தளம் 3,335 மீற்றராக புதிதாக அண்மையில்
நீளமாக்கப்பட்டிருப்பதால், மென்மேலும் பல்வேறு விமான நிறுவனங்களின் பாரிய
எயார் பஸ் விமானங்களை கட்டுநாயக்கவில் தரை இறக்குவது, மிகவும் இலேசாக உள்ள
நிலையில், இது தொடர்பில் தற்போது விரிவாக ஆராயப்பட்டு வருவதாகவும் பிரதி
அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆசிய
நாடுகளிடையே விசேட ஓடு தளம் உடைய இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையம்
தொடர்பில், பெரும்பாலான நாடுகளினதும், வெளிநாட்டு உல்லாசப் பயணிகளினதும்
கவனம் அதிகம் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
விமான நிலையத்தின் ஓடு தளம் விசாலமாக்கப்பட்டிருப்பதால், கட்டுநாயக்க -
துபாய் நகரங்களுக்கு இடையில் புதிய பாரிய எயார் பஸ் விமான சேவை ஒன்று,
விரைவில் முதற்கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து
மேலும் ஆறு பாரிய எயார் பஸ் விமான சேவைகள், கட்டுநாயக்க விமான தளத்தைக்
கேந்திரமாகக் கொண்டு இரண்டாவது கட்டமாக ஆரம்பிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள்
எடுக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் 14 ஆம் திகதி, இலங்கை விமான சேவைகள் வரலாற்றில், முதன்
முறையாக இவ்வாறானதொரு பாரிய எயார் பஸ் விமானம், கட்டுநாயக்க விமான
நிலையத்தில் தரை இறங்குவது, இதுவே முதற்தடவையாகும் என்பது
குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான் )
No comments:
Post a Comment