Wednesday, September 14, 2016

கிழக்கு மாகாணம் பிரிந்திருந்தால்,தென்கிழக்கும் தேவையில்லை

...

1988ம்ஆண்டு நடந்த மாகாணசபை தேர்தலுக்கு பிறகு முஸ்லிம் காங்கிரஸ் வடகிழக்கு பிரிப்பை பற்றி பேசுவதை தவிர்த்தே வந்தது.

அதன் பிற்பாடு சில கோரிக்கைகளை மேடைகளில் கோசங்களாக வைத்ததே தவிர இதுதான் எங்கள் கோரிக்கை என்று திட்டவட்டமாக எங்கும் அந்த கட்சி அறிவிக்கவில்லை.

இருந்தாலும், அந்த கட்சியை சேர்ந்தவர்கள் இன்றுவரை தென்கிழக்குஅலகு,நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணசபை என்ற விடயங்களை அந்த கட்சியின் தலைவர் அஸ்ரப் அவர்கள் முன்னெடுத்தார் என்று கூறிவருகின்றனர்.

இதன் உண்மைத்தண்மை என்னவென்று நாம் பார்ப்போம்.

1988 வடகிழக்கு தேர்தலில் போட்டியிட்டதன் பின் அந்த ஒப்பந்தத்தை எதிர்த்து பேசமுடியாத நிலை வந்தபோதும்,இனிமேல் வடகிழக்கு பிரிக்கப்படமாட்டாது என்ற என்னத்தினாலும்,முஸ்லிம்களாகிய நாம் வடகிழக்கை பிரிக்க முயற்சித்தால் தமிழர்களுக்கும்,முஸ்லிம்களுக்கும் தீராப்பழி ஏற்பட்டுவிடும் என்ற பயத்தினாலும்,பிரிப்பு என்ற கோசத்தை மு.காங். கைவிட்டதாகவே கருதப்பட்டது.

இருந்தாலும் அஸ்ரப் அவர்களின் உள்மனதில், ஏதோ ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் கிழக்கு மாகாணத்தை தனியே பிரித்து விடவேண்டும் என்பதில் அவர் குறியாக இருந்தார் என்பது,பிற் காலத்தில் அவர் பங்கெடுத்த தீர்வு திட்டங்களை கவணித்தால் புரிந்து கொள்ளமுடியும்.

கிழக்கு மாகாணம் பிரிந்திருந்தால்,தென்கிழக்கும் தேவையில்லை,தனி முஸ்லிம் மாகாணசபையும் தேவையில்லை என்பதே அவரது என்னமாக இருந்தது என்பது பின்னால் கூறும் விடயங்களை வைத்தே நாம் தீர்மானிக்க முடியும்.

அந்த நேரத்தில் அஸ்ரப் அவர்கள் தென்கிழக்கு விடயத்திலும்,முஸ்லிம் மாகாணசபை விடயத்திலும் ஒரு நிலைப்பாட்டுக்கு வரமுடியாதவராகவே இருந்தார் என்பதே உண்மையாகும்.

தென்கிழக்கு அலகு என்ற கோரிக்கை கூட தன்னால் வைக்கப்படவில்லை, சந்திரிக்கா அம்மையாரினால்தான் வைக்கப்பட்டது என்று,அஸ்ரப் அவர்கள் சந்திரிக்காவுக்கு எழுதிய நாற்பத்தெட்டு பக்க கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில் இப்படி அவர் எழுதியுள்ளார்.

மேடம் தென்கிழக்குக்கான தனிப்பட்ட நிர்வாகஅலகு ஒன்றை ஸ்ரீ.மு.காங்.எந்த காலத்திலும் கோரவில்லை என்பது தங்களுக்கு வெகு நன்றாகவே தெறியும்.
அதையே ஒரு கோரிக்கையாக வலியுறுத்தி முன்னுறிமை படுத்தவுமில்லை.

வடமாகாணத்திலும்,மட்டக்களப்பு,திருகோணமலை மாவட்டங்களினதும்,சிறுபாண்மை முஸ்லிம்களின் உறிமைகளுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்தும்,ஒரு விட்டுக்கொடுக்கும் அம்சமாகவே தென் கிழக்கு என்ற அலகை நீங்கள் சமர்ப்பித்தீர்கள்.

இந்த தென்கிழக்கு அலகுடன் கூடவே,வடமாகாணத்துடன்,மட்டக்களப்பு,திருகோணமலை மாவட்ட மக்கள் இணைய விரும்புகிறார்களா?அல்லது பிரிய விரும்புகின்றார்களா?என்பதை அறியவும்,அப்படியாயின் அதற்கான அதிகாரத்தை அந்த மக்களுக்கு வழங்கும் பொருட்டு சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடாத்தவும் தாங்களே உத்தேசித்தீர்கள் மேடம்.

இவ்விரு மாவட்ட மக்களும் வடக்குடன் இணையலாம் என்று தீர்மானித்தால் மட்டுமே தென்கிழக்கு அலகு உருவாகும் என்றீர்கள்.
முஸ்லிம்களின் பிரச்சினை தீர்வு சம்பந்தப்பட்ட விடயத்தில் நாமும் அதற்கான அம்சங்களை கொண்டிருந்தபோதிலும்,உங்களது பிரேரணையாக அமைச்சரவைக்கு இது வந்த போது நான் அதை ஏற்றுக்கொண்டேன் மேடம்.....
என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.


இதிலிருந்து  விளங்குவது என்னனெ்றால்,தென்கிழக்கு அலகு என்பது அஸ்ரப்பினாலோ,ஸ்ரீ.ல.மு.கா.யினாலோ முன்வைக்கப்பட்ட ஒன்றல்ல என்பது தெளிவாகும்.
எது எப்படியிருந்தாலும்,
முஸ்லிம்களின் தீர்வு பற்றிய தெளிவில்லாமலேயே,தடைதாண்டல் ஓட்டப்போட்டியாக ஸ்ரீ.மு.கா.தனது அரசியலை முன்னெடுத்து வந்திருந்தது.

அரசின் 'தென்கிழக்கு'அலகை ஏற்றுக்கொள்ளும் அஷ்ரஃப், முஸ்லிம்களின் தீர்வுக்கான விடயத்தில் தங்களிடம் உள்ள தீர்வை பற்றி ஜனாதிபதிக்கான மடலில் குறிப்பிடவில்லை.

ஆரம்ப காலங்களில் 'முஸ்லிம் மாகாணசபையாக'முன்னெடுக்கப்பட்டு வந்த கோரிக்கை,அது ஒரு இனவாதப் போக்காக கருதப்படுகின்றது என்ற காரணத்தினால்தான் அதனை கைவிட்டு,தென்கிழக்கு அலகு என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் என்பதே உண்மையாகும்.

முஸ்லிம் மாகாண சபை என்பது.மு.காங்கிரசின்.ஒரு முரண்பட்ட கோரிக்கையாகவே பார்க்கப்பட்டது.
அதே நேரம், அஸ்ரப்பினால் முன்வைக்கப்பட்ட கரையோரமாவட்டம் கூட 1978களில் மாவட்டங்களை பரவலாக்கும் "மொறகொட"ஆணைக்குழு வைத்த தீர்வேயாகும்.

இப்படியான நிலையில்....

1997ம் ஆண்டு சந்திரிக்கா வைத்த தீர்வின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட மக்களும்,திருகோணமலை மாவட்ட மக்களும் வடக்கோடு இணையமாட்டோம் என்று வாக்களித்தால்,தென்கிழக்கு தேவையில்லை,கிழக்கு பிரிந்தாலே போதும் என்றே இங்கே கூறப்பட்டுள்ளது, என்பதை நாம் இங்கே கவனிக்கவேண்டும்..

அந்த தீர்வு யுஎன்பி யின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டிருந்தது.

அதன் பிற்பாடு 2000ம்ஆண்டு அஸ்ரப் அவர்களின் துணையோடு,சந்திரிக்காவினால் வைக்கப்பட்ட இடைக்கால தீர்வு திட்டத்தில்,
வடகிழக்கு சம்பந்தமாக இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

இந்த தீர்வுதிட்ட நாளிலிருந்து தற்காலிகமாக பத்து வருடங்களுக்கு வடகிழக்கு இணைந்திருப்பதாகவும்,பத்துவருடம் முடிவதற்கு மூன்று மாதத்துக்கு முன் கிழக்கு மாகாண மக்களிடம் சர்வஜன வக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும்,அப்படி ஏதோ ஒரு காரணத்தால் வாக்கெடுப்பு நடத்த முடியாது போனால்,இயல்பாகவே வடக்கும் கிழக்கும் பிரிந்ததாக கருதப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்வ திட்டத்தின் கதாநாயகனே அஸ்ரப்தான் என்பது நாம் எல்லோரும் அறிந்த விடயம்.
அந்த இரண்டு தீர்வு திட்டத்திலும் அவர் கிழக்கு மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த படவேண்டும் என்றே கூறியுள்ளார்.

அந்த இரண்டு தீர்வுதிட்டத்திலும் எந்த சந்தர்ப்பத்திலும்,முஸ்லிம் மாகாணசபை பற்றியோ,தென்கிழக்கு பற்றியோ அவர் கவணம் செலுத்தவில்லை.
மாறாக,கிழக்குமக்களின் அபிப்பிராயம்தான் முக்கியம் என்று கூறப்பட்டுள்ளது.

கிழக்கு மக்களின் அபிப்பிராயம் இந்த விடயத்தில் எப்படி அமையும் என்பது அஸ்ரப் அவர்களுக்கு தெறியாத ஒன்றல்ல.

இப்படியான விடயங்களை மூடி மறைத்து இப்போதுள்ள மு.காங்கிரஸ் தலைமை ஏதோ ஒன்றை சாதிக்க முற்படுகின்றதா?என்ற ஐயமும் தோன்றுகின்றது.

இந்த தீர்வின் படி ஏதோ ஒரு வகையில் வடக்கும், கிழக்கும் பிரிந்திருப்பதையே அஸ்ரப் அவர்கள் உள்மனதில் என்னியுள்ளார் என்பது தெளிவாகின்றது.

இதனை அறிந்தோ அறியாமலோ இப்போது அந்த கட்சியை வழிநடத்துபவர்கள்,
அஸ்ரப் அதை கேட்டார்,இதை கேட்டார் என்று உலருவது எதனை காட்டுகிறது...என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்

இன்னும் வரும்...

ஆக்கம்
எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை...

No comments:

Post a Comment