Wednesday, August 31, 2016

பசஹ் என்ற முறையில் விவாகரத்து பெறும் பெண்ணுக்கு கணவன் நஷ்டஈடு கொடுக்க வேண்டியதில்லை

தனது சொந்த விருப்பத்தின் பேரில் அதாவது பசஹ் என்ற முறையில் விவாகரத்து பெறும் பெண்ணுக்கு கணவன் நஷ்டஈடு கொடுக்க வேண்டியதில்லை என்ற இஸ்லாமிய திருமண சட்டத்தை மாற்ற வேண்டும் என பொதுபலசேனாவை இயக்கும் பின்னணியில் உள்ள நாடுகளின் பண உதவிகளை பெற்றுக்கொண்டு சில முஸ்லிம் பெண்கள் கோருவது இஸ்லாத்தை அவமதிக்கும் செயலாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்தார்.

கட்சித்தலைமையகத்தில் இது சம்பந்தமாக நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் மேலும் தெரிவித்ததாவது, ஒரு முஸ்லிம் பெண் தனது சொந்த விருப்பத்தின் பேரில் தனது கணவனை விவாக ரத்து செய்ய முடியும் என்ற உரிமையை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது என்பதை முதலில் சகலரும் புரிந்து கொள்ள வேண்டும். ஐரோப்பிய பெண்களுக்குக்கூட இந்த உரிமை அண்மைய சில நூற்றாண்டுகளுக்கு முன்பே கிடைத்தது.
அதேவேளை பெண் தனது சொந்த விருப்பின் பேரில் கணவனை விவாகரத்து செய்யும் போது கணவன் அவளுக்கு நஷ்டஈடு கொடுக்கத்தேவை இல்லை என்ற இஸ்லாமிய திருமண சட்டத்தில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. அவை கூட பெண்களினதும் அவர்களின் பிள்ளைகளுக்கும் உதவக்கூடியனவாகும்.
இஸ்லாம் பொதுவாக விவாகரத்தை விரும்பவில்லை. முடிந்த வரை கணவன் மனைவி இணைந்து வாழ்வதையே ஊக்குவிக்கிறது.

பெண் பொதுவாக உணர்வுக்கு இலகுவாக அடிமையாவாள் என்பது நவீன யுகத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். இந்த வகையில் பசஹ் முறையிலான விவாகரத்தின் போது தனக்கு கணவனிடமிருந்து நஷ்ட ஈடு கிடைக்காது என்பதை புரியும் ஒரு முஸ்லிம் பெண் இலகுவில் விவாகரத்தை கோருவதற்கு முன்வராமல் பொறுமையாக தன் கணவனுடன் வாழ முற்படுவாள். இத்தகைய வாழ்வின் தத்துவத்தை உணரச்செய்து தனது பிள்ளைகள் அனாதைகளாவதை தவிர்ப்பதற்காக இஸ்லாம் இத்தகைய திருமண சட்டத்தை இயற்றியுள்ளது.

 நடைமுறையில் இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து விவாகரத்துக்கு முயன்று பின்னர் அதனை கைவிட்டு மீண்டும் சிறப்hபான வாழ்க்கையை தொடரும் பல குடும்ப பெண்களை நாம் காணுகின்றோம்;. இஸ்லாமிய திருமண சட்டம் என்பது மனிதர்களால் இயற்றப்பட்டதல்ல, அவை இறைவனால் இயற்றப்பட்டவை என்பதை முஸ்லிம் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அத்துடன் பெண் பசஹ் மூலம் விவாகரத்து செய்யும் போது அவளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என சட்டத்திருத்தம் கொண்டு வந்தால் அது பல பெண்களை இவ்வாறான விவாகரத்துக்கு தூண்டச்செய்யும். மோசமான நடத்தையுள்ள பெண்கள் எடுத்த எடுப்பில் கணவனை பசஹ் செய்து விவாகரத்து செய்து விட்டு அவனிடமிருந்து நஷ்டஈட்டையும் பெற்றுக்கொண்டு அடுத்த வீட்டுக்கரனுடன் அவள் குடும்பம் நடாத்தும் நிலையும் ஏற்படலாம். அவனும் பிடிக்காவிடில் அவனையும் பசஹ் செய்து அவனிடமிருந்தும் நஷ்ட ஈடு பெற்றுக்கொண்டு வீதியால் செல்லும் இன்னொருவனை நாடவும் இது மிக இலகுவாக வழி செய்யும். இவ்வாறான துஷ்பிரயோகங்கள் ஏற்பட்டு பெண்கள் சீரழியக்கூடாது என்பதற்காகவும், ஒரு சமூக கட்டுப்பாட்டுக்காகவுமே  பச{ஹக்கு நஷ்டஈடு வழங்கும் சட்டத்தை இஸ்லாம் தரவில்லை. கணவனின் எதுவும் தேவையில்லை என அவனை பசஹ் செய்யும் பெண் விவாகரத்தன் பின் அவனிடம் பணம் பெறுவது விபச்சாரத்துக்கு ஒப்பானதாகும்.
ஒரு சில கணவர்கள் தமது மனைவியர் விடயத்தில் பொறுப்புடன் நடந்து கொள்வதில்லை என்பதால் சில பெண்கள் பாதிக்கப்படுவது உண்மை. இதற்குக்காரணம் இறைவன் மீதான அச்சமின்மையாகும். இது விடயத்தில் மனைவிமார் தமது கணவன் இஸ்லாமிய வழிமுறைகளை சரியாக அமுல் படுத்துகிறாரா, பள்ளிவாயலுடன் தொடர்புள்ளவராக வாழ்கிறாரா என்ற விடயங்களில் அக்கறை செலுத்துவதன் மூலமும் அன்பு, பொறுமை, அடக்கம் போன்றவற்றால் கணவன்மாரை திருத்துவதற்கு பெண்கள் முயல  வேண்டும்.


ஆகவே இஸ்லாமிய திருமண சட்டத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற குரலுக்கு மேலைத்தேய நாடுகள் உதவுவதன் மூலம் இஸ்லாத்தை கொச்சைப் படுத்த முனைகின்றன. இத்தகைய கோரிக்கைகளுக்கு பின்னால் இஸ்லாம் என்றால் என்னவென்றே தெரியாத சில  "ஹிப்பி" முஸ்லிம் பெண்கள் இருப்பதை காண்கிறோம். இலங்கையில் வாழந்த நமது முன்னோர் மிகவும் கஷ்டப்பட்டு பெற்று இந்த நாட்டின் அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுத்தந்த இஸ்லாமிய திருமண சட்டத்தை நாம் வலுவிழக்க செய்ய முனைவதன் மூலம் பொதுபல சேனாவின் முயற்சிகளுக்கு முஸ்லிம் பெண்கள் துணைபோகக்கூடாது. நமக்கான புதிய உரிமைகளை பெறுவது குதிரைக்கொம்பாகியுள்ள இந்த காலத்தில் இருக்கும் நாம் பெற்ற உரிமைகளுக்கு நாமே ஆப்பு வைக்க துணை போக கூடாது. இவ்வாறுதான் கடந்த ஆட்சியில் சில முஸ்லிம்கள் ஹலால் பற்றி சேனாவிடம் முறையிட்டதன் காரணமாக ஹலால் உரிமை பறி போய் இன்று பன்றிக்கொழுப்பு கொண்ட உணவு எது என்று புரியாமல் அனைத்து ஹராத்தையும் உண்ணும் நிலைக்கு சமூகம் தள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் மு கா தலைவர் ஹக்கீம் நீதி அமைச்சராக இருந்த போது அவரை கையில் போட்டுக்கொண்டு இஸ்லாமிய திருமண சட்டத்தில் மாற்றம் கொண்டுவர இத்தீய சக்திகள் முயன்றனஇதற்கெதிராகா உலமா கட்சி மட்டுமே போர்க்கொடி தூக்கியதால் அதனை அவர்களால் சாதிக்க முடியாது போயிற்று. தற்போதைய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இது சம்பந்தமாக பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர முனைந்த போதும் உலமா கட்சி எதிர்த்ததால் அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆனாலும் நாளை இதுவிடயத்தில் எதுவும் நடக்கலாம். எனவே முஸ்லிம் சமூகம் இது விடயத்தில் பல முன்னெடுப்புக்களை எடுத்து மக்களையும் அரசையும் தெளிவு படுத்த முயலும் உலமா கட்சிக்கு உதவ முன் வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment